சேலம் அழகாபுரம் கூட்டுறவு மண்டபத்தில் மகளிர் உரிமை திட்ட பயனாளிகள் 500 பேருக்கு ஏ.டி.எம். கார்டுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். அமைச்சர் கே.என்.நேரு முன்னிலை வகித்தார். இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று 500 பயனாளிகளுக்கு ஏ.டி.எம். கார்டுகளை வழங்கினார். முன்னதாக அவர் பேசியதாவது: பொருளாதார சுதந்திரம் அடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தமிழக முதலமைச்சரால் கொண்டுவரப்பட்ட திட்டம் தான் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்.
இந்த திட்டத்தின் பயனாளிகள் 500 பேருக்கு ஏ.டி.எம். கார்டுகள் வழங்குவதில் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த திட்டம் வாழ்க்கை மாற்றத்திற்கு துருப்பு சீட்டாக உள்ளது. கர்நாடகா, தெலுங்கானா உள்பட பல மாநிலங்களிலும் இந்த திட்டத்தை எப்படி செயல்படுத்துவது என ஆராய்ந்து வருகிறார்கள். இது ஒரு முன்மாதிரி திட்டம். பெண்களின் கனவு திட்டம், கலைஞர் மற்றும் தற்போதைய முதலமைச்சரால் பெண்கள் வளர்ச்சிக்கு ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
பெண்களுக்காக குரல் கொடுத்த இயக்கம் தி.மு.க., பெண்களுக்கு தந்தை சொத்தில் பங்கு வாங்கி கொடுத்தது தி.மு.க., இந்த சட்டத்தை கொண்டு வந்ததும் தி.மு.க. தான். தற்போது பெண்கள் சுதந்திரமாக செயல்படும் வகையில் கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம், மகளிருக்கு கட்டணமில்லா இலவச பேருந்து, மகளிருக்கு உரிமை தொகை ஆயிரம் ரூபாய், பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
கலைஞர் மகளிர் உரிமைச் திட்டம் பெண்களுக்கு மகுடம் சூட்டிய திட்டம். இந்தத் திட்டத்தால் சகோதரனாக நான் மகிழ்ச்சி அடைகிறேன். அனைவரும் செல்போன் பயன்படுத்துகிறீர்கள். உண்மையான தகவலை அனைவருக்கும் பரப்ப வேண்டும். பொதுமக்கள் அரசியல் குறித்து பேச வேண்டும். உள்ளாட்சியில் 50 சதவீத இடம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த சாதனையை செய்தது தி.மு.க. தான், மகளிர் பகுத்தறிவுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக நேற்று இரவு சேலம் அரசு கல்லூரி ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து இன்று ரூ.1 லட்சம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை மாணவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.