பா.ஜ.க.வுடனான கூட்டணி முறிவுக்குப் பின் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அந்த வகையில், விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் காய்ச்சல் காரணமாக வடபழனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இன்று இரண்டாவது நாளாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார். இந்த சூழ்நிலையில் தான் அதிமுகவினுடைய பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொலைபேசி வாயிலாக திருமாவளவனுடைய உடல் நலம் குறித்து கேட்டறிந்ததாக விசிக கட்சியின் நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.

30ஆம் தேதி வரை மருத்துவமனை ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் திருமாவளவனுக்கு அறிவுறுத்தல் செய்திருக்கிறார்கள். எனவே உடல்நலம் குறித்து அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொலைபேசி வாயிலாக நேற்று இரவு பேசி நலம் விசாரித்து இருப்பதாக விசிக கட்சியினுடைய நிர்வாகிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.அதிமுக & பாஜகவினுடைய கூட்டணி முறிவு ஏற்பட்டிருந்தாலும் இது உடல் நலம் குறித்து மட்டுமே விசாரிப்பதாக விசிக கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.

ஆனாலும், விபரமறிந்த அரசியல் நோக்கர்களின் கருத்துக்கள் வேறு மாதிரி இருக்கிறது. அதாவது, கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியை தி.மு.க. தலைமை மதிக்கவில்லை என வி.சி.வின் தி.மு.க.விற்கு எதிராக போராட்டங்களை நடத்தினர். அதன் பிறகு திருமாவளவன் தலையிட்டு பிரச்னை சுமூகமாக முடித்து வைத்தார்.

இந்த நிலையில்தான் அ.தி.மு.க. பக்கம் நாம் சென்றால் நமக்கான மரியாதையும், அங்கீகாரமும் கிடைக்கும் என திருமாவுக்கு நெருக்கமான சிலர் கூறிவந்த நிலையில், எடப்பாடியின் நலம் விசாரிப்பு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக்கான அச்சாரம்தான் என அடித்துக் கூறி வருகின்றனர்.

ஏற்கனவே நாம் தமிழர் கட்சி அ.தி.மு.க. பக்கம் சாய்ந்திருக்கும் நிலையில், திருமா, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினருமே அ.தி.மு.க. பக்கம் தங்களது ‘ஸ்போகஸை’ திருப்பியிருக்கிறார்கள். இது தி.மு.க.விற்கு செக்தான் என்றனர்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal