பிரச்சார செலவுக்கு பணம் இல்லாததால் ஒடிசாவின் புரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுசாரித்தா மொஹந்தி தேர்தல் போட்டியில் இருந்து விலகி உள்ளார்.

ஒடிசாவில் சட்டப்பேரவை, மக்களவைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுகிறது. அங்கு மே 13, 20, 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், புரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சுசாரித்தா மொஹந்தி போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சுசாரித்தா மொஹந்தி நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: நான் செய்தியாளராக பணியாற்றுகிறேன். எனது வருவாய் மிகவும் குறைவு. கடந்த 10 ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டு வருகிறேன். தற்போது புரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. தேர்தல் பிரச்சார செலவுக்காக பொதுமக்களிடம் பணம் திரட்ட முயன்றேன். ஆனால் எனது முயற்சி வெற்றி பெறவில்லை. எதிரணியில் பிஜு ஜனதா தளம், பாஜக வேட்பாளர்கள் பணத்தை வாரியிறைக்கின்றனர். என்னிடம் பணம் இல்லை, கட்சி தரப்பிலும் பணம் வழங்க மறுத்துவிட்டனர். வேறு வழியின்றி போட்டியில் இருந்து விலகி உள்ளேன்.

ஒடிசாவின் 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பலவீனமான வேட்பாளர்களை கட்சி தலைமை நிறுத்தி உள்ளது. அந்த தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறுவது கடினம். இதுபோன்ற சூழலில் நான் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புரி மக்களவைத் தொகுதியில் வரும் 25-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அந்த தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் ஆகும். எனவே புதிய வேட்பாளரை காங்கிரஸ் தலைமை உடனடியாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு புரி மக்களவைத் தொகுதியில் பிஜு ஜனதா தளத்தை சேர்ந்த பினாகி மிஸ்ரா 5.38 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். குஜராத்தின் சூரத் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதர வேட்பாளர்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றதால் அந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

மத்திய பிரதேசத்தின் இந்தூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அக்சய் காந்தி பம் கடைசி நேரத்தில் வேட்புமனுவை வாபஸ் பெற்று, பாஜகவில் ஐக்கியமாகி விட்டார். அந்த தொகுதியில் பாஜகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது புரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் சுசாரித்தா போட்டியில் இருந்து விலகி உள்ளது காங்கிரஸுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal