தமிழக அரசியல் களத்தைப் பொறுத்தளவில் கணக்குப் போட்டுக் காய் நகர்த்துவதில் வல்லவர் எடப்பாடி கே.பழனிசாமி! தனக்கு கிடைத்த ஒரே வாய்ப்பை பயன்படுத்தி ஒட்டு மொத்த அ.தி.மு.க.வையும் தன்வசப்படுத்தினார் எடப்பாடி பழனிசாமி!

அதிமுக – பாஜக இடையிலான கூட்டணி இன்று கிளைமேக்ஸை எட்டி உள்ளது. ஜெயலலிதா, அண்ணா போன்ற தலைவர்களை பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்து பேசி இருந்தார். அவரின் பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பாஜகவுடன் கூட்டணியை அதிமுக முறிக்கிறது என்று ஜெயக்குமார் அறிவித்தார்.

இதையடுத்து மாஜி அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில், பாஜக உடனான கூட்டணியில் எங்களுக்கு குழப்பம் இல்லை. பிரதமர் மோடிதான் மீண்டும் பிரதமர் ஆக வேண்டும். அதற்கான பணிகளை செய்ய நாங்கள் தயார், அதேபோல் எடப்பாடியை முதல்வராக பாஜக ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும், என்று செல்லூர் ராஜு கூறினார்.

இன்னொரு பக்கம் பாஜக தலைவர் அண்ணாமலையும் இந்த கூட்டணி குறித்து உறுதியான அறிவிப்பை வெளியிடாமல் மழுப்பலாக பேசினார். அவர் பேச்சில், அதிமுக- பாஜக இடையே எந்த பிரச்சினையும் இல்லை. அதிமுகவில் உள்ள சில தலைவர்களுக்கும் அண்ணாமலைக்கும் பிரச்னை இருக்கா ? இருக்கலாம்.. ஆனால், அதுவும் எனக்கு தெரியாது! கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையே மோதல் வருவது எல்லாம் சகஜம்தான், என்றார். அதன்பின் நேற்று ஜெயக்குமார் அளித்த பேட்டியில் மீண்டும், பாஜகவுடன் கூட்டணி இல்லை. எங்கள் கூட்டணி முறிந்துவிட்டது என்பதை அப்போதே அறிவித்துட்டோம், என்று மீண்டும் கூட்டணிக்கு எதிராக பேசி உள்ளார். அண்ணாமலை ஒன்று.பேச . செல்லூர் ராஜு ஒன்று பேச.. ஜெயக்குமார் வேறு ஒன்று பேச ஒரே குழப்பமாக மாறி உள்ளது.

இந்த நிலையில்தான் இன்று கூட்டணி குறித்த இறுதி முடிவை எடுப்பதற்காக எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை செய்தார். இதற்காக இன்று மாலை மாவட்டச் செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு அதிமுக அழைப்பு விடுத்தது. இன்று நடந்த கூட்டத்தில் அதிமுக – பாஜக கூட்டணியை முறித்துக்கொள்ளலாம் என்று மாவட்டச் செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் ஆலோசனை வழங்கினர்.

மாவட்டச் செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் எல்லோரும் ஒரே குரலில் கூட்டணியை முறிக்கலாம் என்று ஆலோசனைவழங்கியதாக கூறப்படுகிறது. இதை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்ட நிலையில், அதிமுக – பாஜக கூட்டணியை முறிக்கும் முடிவு எடுக்கப்பது. அதோடு அதிமுக புதிய கூட்டணியை உருவாக்கலாம். பாஜக அல்லாத புதிய கூட்டணியை உருவாக்கலாம் என்றும் முடிவு எடுக்கப்பட்டது.

இங்கே இன்னொரு பக்கம் திமுக கூட்டணியில் மோதல் இல்லை என்றாலும், திமுக இந்த லோக்சபா தேர்தலில் அதிக இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்காது என்கிறார்கள். இந்த லோக்சபா தேர்தலில் கடந்த தேர்தலில் கொடுத்தது போல விசிக, சிபிஎம், சிபிஐக்கு 2 இடங்களை திமுக கொடுக்காது. காங்கிரசுக்கும் 10 இடங்களை கொடுக்காது என்கிறார்கள். மாறாக இவர்களுக்கு தலா 1 இடம், காங்கிரஸ் 6&-7 இடங்களை கொடுக்கும் திட்டத்தில் திமுக இருக்கிறதாம்.

இதன் காரணமாக அதிர்ச்சி அடையும் விசிக போன்ற கட்சிகள் சமயங்களில் அதிமுக கூட்டணியில் இணைய திட்டமிடலாம். இத்தனை காலம் பாஜகவுடன் கூட்டணி இருந்ததால் அதிமுக கூட்டணியில் இணைய மறுத்த விசிக, சிபிஎம், சிபிஐ ஆகியவை அதிமுக – பாஜக கூட்டணி முறிவதால் அதிமுக கூட்டணிக்கு செல்ல வாய்ப்புகள் உள்ளன.

இதற்கிடையே, காங்கிரஸ் கட்சிக்கும் பத்து இடங்களை தி.மு.க. கொடுக்க முன்வராத நிலையில், காங்கிரசும் அ.தி.மு.க. பக்கம் சாய வாய்ப்பு அதிகம் இருக்கிறது. காரணம், காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் ஆலோசகராக இருக்கும், தேர்தல் வியூக நிபுணர் சுனில், இன்று வரை எடப்பாடி பழனிசாமிக்கு தொடர் ஆலோசனை வழங்கி வருகிறார். இந்த நிலையில்தான் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுத்த முடிவினால், தமிழக அரசியல் களமே மாறும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

எதிர்காலத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வருகிறோ, அதனை கணித்து கணக்குப் போட்டு காய் நகர்த்துபவர் எடப்பாடி பழனிசாமி! அந்த வகையில் அடுத்து ஆட்சி மாற்றம் நிகழப் போகிறதோ என்ற பேச்சும் அடிபட ஆரம்பித்திருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal