அமைச்சர் துரைமுருகன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கர்நாடகாவில் அவர்கள் முழு அடைப்பு நடத்துவது பற்றி நான் ஒன்றும் சொல்ல தேவையில்லை. ஆனால் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து ஒவ்வொருவரும் ஆர்ப்பாட்டங்களும், பேரணிகளும் நடத்த ஆரம்பித்தால், சுப்ரீம் கோர்ட்டுக்கு என்று கொடுக்கப்பட்டிருக்கிற தனி அதிகாரம் என்ன ஆகும் என்பதை அரசியல் தெளிவு தெரிந்தவர்கள் உணர வேண்டும்.

அதே நேரத்தில் சுப்ரீம் கோர்ட்டும் தங்களுடைய கருத்துக்கு எதிர்ப்பு வருவதை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்பதையும் சுப்ரீம் கோர்ட்டு தான் தீர்மானிக்க வேண்டும். 13.9.2023 முதல் 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. அதை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது. நாளையுடன் அந்த 15 நாள் கெடு முடிகிறது. இடையில் கர்நாடகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தாலும் நமக்கு தர வேண்டிய தண்ணீரை தந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் 2500 கனஅடி, 3000 கனஅடி என்று வழங்கியவர்கள் படிப்படியாக இன்று காலை நிலவரப்படி 7 ஆயிரம் கனஅடி திறந்து விட்டுள்ளனர். இன்னும் நமக்கு 11 ஆயிரம் கனஅடி தண்ணீர் வரவேண்டி இருக்கிறது. நாளைக்குள் இந்த தண்ணீர் வந்துவிடும் என்று நான் எதிர்பார்க்கிறேன். காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் அடுத்த கூட்டம் ஆன்லைனில் இன்று நடக்கிறது. இந்த கூட்டத்தில் நமக்கு தேவையான 12,500 கனஅடி தண்ணீரை தர வேண்டும் என்று வற்புறுத்துவோம்.

காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு பின்பற்றப்பட வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் படி நிலுவையில் உள்ள தண்ணீரை கர்நாடகா திறக்க வேண்டும். பாஜக கூட்டணியில் இருக்கக் கூடாது என்பதை உணர்ந்துதான் அதிமுக முடிவு செய்துள்ளது. அதிமுக கூட்டணி முறிவு, அவர்கள் வீட்டில் நடப்பது, அதைப்பற்றி நாம் கருத்து கூற முடியாது. அதிமுக- பாஜக கூட்டணியில் இருக்க வேண்டுமா? இருக்கக்கூடாதா என்பதை அந்த கட்சி தலைவர்கள் உணர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal