நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதம் காலம் உள்ள நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க. இன்றே களத்தில் இறங்கிவிட்டது.

நாடாளுமன்றத் தேர்தல் அடுத்தாண்டு ஏப்ரல்,மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளன. ஒவ்வொரு தொகுதிகளிலும் வாக்குச்சாவடி முகவர்களுடன் ஆலோசனையை நடத்தி முடித்துள்ளது. இதனை அடுத்து திமுக தனது கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்வதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. திமுக கூட்டணியை பொறுத்தவரை காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளனர்.

திமுக கூட்டணியில் மேலும் ஒரு சில கட்சிகள் வர இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் இடம் பெற இருப்பதாக கூறப்படுகிறது. எனவே ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை தொகுதிகளை ஒதுக்கப்படும் என்று கேள்விலானது அனைவரும் மத்தியில் எழுந்துள்ளது. இறுதிக்கட்டத்தில் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் திமுக தனது தொகுதி பங்கீடு தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது. முதல் கட்டமாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தேசிய தலைவர் காதர்மொய்தின், ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி உள்ளிட்டோர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ளனர்.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்னிலையில் இந்த பேச்சுவார்த்தையானது நடைபெற்றுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த தொகுதி மீண்டும் ஒதுக்கப்படுமா.? அல்லது வேறு தொகுதி மாற்றப்படுமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

மேலும் பாஜகவிற்கு எதிராக இந்தியா என்ற கூட்டணி தொடங்கப்பட்டுள்ளது. மும்பையில் நடைபெற்ற கூட்டத்தில் விரைவில் தொகுதி பங்கீட்டை முடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. அந்த வகையில் இன்றைய பேச்சுவார்த்தை அமைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தி.மு.க. தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ள நிலையில் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு பற்றி மூத்த ரத்தத்தின் ரத்தங்களிடம் பேசினோம்.

‘‘சார், தி.மு.க. கூட்டணியில் எந்தெந்தக் கட்சிகள் இருக்கிறது என்பது உறுதியாகிவிட்டது. ஆனால், அ.தி.மு.க. கூட்டணில் பா.ஜ.க. இல்லை என்று முதல்நாள் ஜெயக்குமார் கூறுகிறார். அடுத்த நாள் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இருந்து ‘பா.ஜ.க.வைப் பற்றி யாரும் விமர்சிக்கக் கூடாது… நம் கூட்டணியில்தான் பா.ஜ.க. இருக்கிறத’ என்கிறார்கள்.

அதற்கடுத்த நாள், ‘நான்தான் அன்றே சொல்லிவிட்டேனே… அ.தி.மு.க. & பா.ஜ.க. கூட்டணி உறவு முறிந்துவிட்டது’ என என்கிறார் ஜெயக்குமார். தி.மு.க. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தி வரும் நிலையில், அ.தி.மு.க. கூட்டணி விவகாரமே தொங்கலில் கிடக்கிறது. அ.தி.மு.க.வின் ‘ஆடுபுலி’ ஆட்டத்தில் உண்மையான ரத்தத்தின் ரத்தங்கள்தான் சோர்வடைந்திருக்கின்றனர்’’ என்றனர் சோகத்துடன்!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருக்கும் போது, அவர்தான் முதன் முதலாக வேட்பாளர் லிஸ்டையே வெளியிடுவார். ஆனால், இன்றைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜெயலலிதாவின் பாணியை கையில் எடுத்துள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal