விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பூத்துறை கிராமத்தில் செம்மண் குவாரி உள்ளது. இங்கு அளவுக்கு அதிகமாக மண் எடுத்து அரசுக்கு 24 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படுத்தியதாக அப்போது கனிம வளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மீது அப்போதைய வானூர் தாசில்தாராக இருந்த குமாரபாலன் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதனை தொடர்ந்து அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி எம்.பி. உள்ளிட்ட 8 பேர் மீது கடந்த 2017-ல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. விசாரணையின்போது சில சாட்சிகள் பிறள் சாட்சிகளாக மாறினர். இந்த வழக்கில் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வக்கீல் சீனிவாசன் மூலமாக மனுதாக்கல் செய்துள்ளார். அதில், அரசு தரப்புக்கு உதவியாக விசாரணைக்கு எங்களையும் அனுமதிக்க வேண்டும். குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வாதிட இந்திய பிரதிநிதியான அனைவருக்கும் உரிமை உள்ளது.
இதுபோன்ற வழக்குகளில் வேறு மாநிலங்களில் மனுதாக்கல் செய்து விசாரணை நடந்து வருகிறது என குறிப்பிட்டு இருந்தார். இந்த மனு மீதான விசாரணை கடந்த வாரம் நீதிபதி பூர்ணிமா முன்னிலையில் நடந்தது. அப்போது, மனுவை விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்த நீதிபதி, இன்று (திங்கட்கிழமை) ஜெயக்குமார் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று காலை ஆஜரானார். முன்னதாக அவர் விழுப்புரத்தில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்திற்கு சென்றார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.