‘நான் ரெடி… நீங்க ரெடியா..?’ என அ.தி.மு.க.விற்கு மறைமுகமாக அண்ணாமலை சவால் விட்டிருப்பதுதான் தமிழக அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

அதிமுக – தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்னாமலை இடையே வார்த்தைப் போர் நிலவி வருகிறது. சமீபத்தில் பேரறிஞர் அண்ணா குறித்து அண்ணாமலை பேசியது அதிமுகவினரை கோபத்திற்கு உள்ளாக்கியது. அண்ணா குறித்து தவறாகப் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆனாலும், அண்ணாமலை மன்னிப்ப்பு கேட்க மாட்டேன், நான் வரலாற்றில் நடந்த சம்பவத்தையே கூறினேன் என முரண்டு பிடித்தார்.

இதையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிரடியாக அறிவித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அதிமுக மூத்த நிர்வாகிகள் டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர்களைச் சந்தித்தனர். பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை அந்தப் பதவியில் இருந்து நீக்கினால் தான் கூட்டணி குறித்து முடிவு எடுக்க முடியும் என்று அதிமுக நிர்வாகிகள் வலியுறுத்தியதாகவும் ஆனால் தேசிய தலைமை அதனை புறக்கணித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘‘அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்ற கருத்தில் எந்த மாறுபாடும் இல்லை. நாளை எம்ஜிஆர் மாளிகையில், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. கூட்டம் நடைபெறவுள்ள சூழலில் என்னால் வேறு எந்த கருத்தும் தெரிவிக்க இயலாது. ஒருநாள் காத்திருந்தால், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை அறிவிக்கிறேன்.

தமிழகத்தில் உள்ள பிரச்சனைகளை கூறுவதற்காகவே மத்திய அமைச்சர்களை அதிமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தனர். கட்சி பிரச்னை குறித்து பேசவில்லை. ஐடி ரெய்டு என்கிற பூச்சாண்டிக்கு எல்லாம் பயப்படும் இயக்கம் அதிமுக கிடையாது. 1972 முதல் பல சோதனைகளை தாண்டி வளர்ந்த இயக்கம் அதிமுக. ஆகவே, சோதனைகளுக்கு பயப்படும் கூட்டம் அதிமுக இல்லை’’ எனக் கூறினார்.

இந்த நிலையில் கோவையில் “என் மண் என் மக்கள்” பாதயாத்திரையில் பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அதிமுக உடனான கூட்டணி மோதல் பற்றி மறைமுகமாக சுட்டிக்காட்டிப் பேசினார். அண்ணாமலை பேசுகையில்,

‘‘அரசியல் மாற்றம் வேண்டும் என விரும்பும் மக்களை பார்த்துவிட்டோம். இது ஒரு சவாலான காலகட்டம் தான். நிறைய பேரை எதிர்த்து நிற்க வேண்டிய காலகட்டம். அதை எல்லாம் பார்த்துக் கொள்ளலாம். எத்தனை பேரை பார்த்தாச்சு. இவர்களையும் பார்ப்போம். ஏனென்றால், மக்களின் நம்பிக்கையை பார்த்த பிறகு, ஒரு மாநிலத் தலைவராக சில வேலைகளை நான் செய்யவில்லை என்றால், உங்கள் நம்பிக்கைக்கு நான் பாத்திரமானவன் இல்லை என்று அர்த்தமாகிவிடும். உங்கள் நம்பிக்கையை விட மாட்டேன், கெட்டியாகப் பிடித்துக் கொள்வேன்.

நாம் சில சவால்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. சில இடர்பாடுகளை தாண்டியாக வேண்டும். சில நிலைப்பாடுகளை எடுக்க வேண்டும். சில மனிதர்களை எதிர்த்து நிற்க வேண்டும். அதற்கு தனி மனிதனாக நான் தயாராகி விட்டேன். பாஜகவும் தயாராகும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. காரணம், இது அரசியல் மாற்றத்திற்கான அரிச்சுவடி. எதற்கும் நான் துணிந்துவிட்டேன். யாரையும் எதிர்க்க நான் ரெடி’’ என அண்ணாமலை பேசியுள்ளார்.

அண்ணாமலை, அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்பதில் திட்டவட்டமாக இருப்பதையே அவரது பேச்சு காட்டியுள்ளது. இது ஓ.பி.எஸ். மற்றும் டி.டி.வி.தினகரன் தரப்பை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal