வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க.வும், மத்தியில் ‘இந்தியா’ கூட்டணியும் வெல்ல வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் இரவும் பகலும் அயராது உழைத்து வருகிறார். ஆனால், மக்கள் வரிப்பணத்தில், மக்கள் வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டிய நிதி நீதிமன்ற வழக்கு செலவிற்கு பயன்படுத்தப்பட்டிருப்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இது பற்றிய விபரம் வருமாறு…. திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியத்தில், கடந்த 23ம் தேதி ஒன்றியக் குழு கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் சேர்மன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் குமார் உள்பட மக்கள் பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் சோபனபுரம் தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் ராமச்சந்திரன் திடீர் தர்ணாவில் ஈடுபட்டதுதான் பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம், அண்ணா மறுமலர்ச்சி திட்டப் பணிகளின் கீழ் சுமார் ரூ.49.20 லட்சம் மதிப்பில் ‘வளர்ச்சி’ திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டு வேலைகள் நடந்து வருகிறது. இப்பணிகள் நடைபெறுவது பற்றி தனக்கு முறையான தகவலை கொடுக்கவில்லை என மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். சம்பந்தப்பட்ட வழக்கை எதிர்கொள்ள உப்பிலியபுரம் ஒன்றிய அலுவலகம் சார்பில் பொதுநிதியிலிருந்து ரூ.10 ஆயிரம் செலவிடப்பட்டுள்ளதை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்டிருக்கிறார். இவருக்கு ஆதரவாக வழக்கறிஞரும், கவுன்சிலருமான அத்தியப்பன் மற்றும் முத்துக்குமார் ஆகியோரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உப்பிலியபுரம் ஒன்றியத்தில் தி.மு.க. கவுன்சிலர் ஒருவரே தர்ணாவில் ஈடுபட்டது பற்றி உண்மையான உடன் பிறப்புக்கள் சிலரிடம் பேசினோம்.
‘‘சார், சமீபத்தில்தான் மதுரை உயர்நீதிமன்றம் ஊரகப்பகுதிகளில் நடக்கும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட கவுன்சிலர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. ஆனால், ‘கலெக்ஷன்… கமிஷன்…’ ஆகியவற்றை தாங்களே பெற்றுக்கொள்வதற்காக சம்பந்தப்பட்ட கவுன்சிலர்களுக்கு தகவல்களை கொடுப்பதில்லை.
பொதுவாக அரசை எதிர்த்து அரசு ஊழியர்கள் வழக்கு தொடுப்பார்கள் (அதாவது பதவி உயர்வு போன்ற காரணங்களுக்கு). அடுத்தது, பாதிக்கப்பட்டவர்கள் அரசை எதிர்த்து நஷ்ட ஈடுகேட்டு வழக்கு தொடுப்பார்கள். ஆனால், மக்கள் வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி வழக்கு தொடுத்த விவகாரத்திற்கு, மக்கள் வரிப்பணத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு ஒதுக்கிய நிதியில் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு ரூ.10 ஆயிரத்தை பொது நிதியில் இருந்து எடுத்தது எந்த வகையில் நியாயம்?
ஒரு பத்தாயிரம் ரூபாய் இருந்தால், சிறிதாக ஒரு குடிநீர் டேங்க (பிளாஸ்டிக்) அமைக்கலாம். அது மக்களுக்கு பேருதவியாக இருக்கும். தெருவிளக்கு ஒன்றை அமைக்கலாம்..!
ஏற்கனவே, உப்பிலியபுரம் ஒன்றியத்தில் தரமான சாலைகள் இல்லை…. ஏரி, குளங்கள் மாயமாகிவருகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் மக்கள் வரிப்பணத்தில் வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வழக்கு செலவிற்கு எடுத்ததுதான், அக்கட்சியினரையே (தி.மு.க.) கொந்தளிக்க வைத்திருக்கிறது. இந்த விவகாரத்தில் அருண் நேரு ஒரு சாரருக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுகிறது. எனவே, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக கவனம் செலுத்தி, தவறு செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
ஊரகப் பகுதிகள் வளர்ச்சி அடைவதற்குதான் வட்டார வளர்ச்சி அதிகாரி உள்ளார். ஆனால், அவரும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் ‘வளர்ச்சி’ அடைவதற்கு இல்லை என்பதை காலம் விரைவில் உணர்த்தும்!