வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் சாயம் வெளுக்கப் போகிறது என கோவையில் வெளுத்து வாங்கியிருக்கிறார் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை!

தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை, என் மண், என் மக்கள் என்ற பெயரில் சட்டசபை தொகுதி வாரியாக நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று அவர் கோவை மாவட்டத்தில் தனது நடைபயணத்தை தொடங்கினார்.

கோவை வால்பாறை தொகுதிக்கு உட்பட்ட ஆனைமலை பகுதியிலும், தொடர்ந்து பொள்ளாச்சி பகுதியிலும் நடைபயணம் மேற்கொண்டார். அவருக்கு பாரதிய ஜனதாவினரும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பட்டாசு வெடித்தும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் அவரை வரவேற்றனர். பொதுமக்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பொதுமக்கள் வரவேற்புக்கு மத்தியில் அண்ணாமலை பேசியதாவது:-

‘‘வால்பாறை சட்டசபை தொகுதியின் பிரச்சினைகளை இங்குள்ள ஆட்சியாளர்கள் தீர்க்கவில்லை. ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் செல்ல வனப்பகுதியின் எல்லையில் சோதனைச்சாவடி அமைத்துள்ளார்கள். மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை சுற்றுலாபயணிகளுக்கு வால்பாறை செல்ல அனுமதி இல்லை என்கிறார்கள். விரைவில் சுற்றுலாபயணிகள் 24 மணி நேரமும் அனுமதிக்கப்படவில்லை என்றால் பாரதிய ஜனதா மிகப்பெரிய போராட்டத்தை நடத்தும். காமராஜர் அணைகளை கட்டி விவசாயத்துக்கு நீரை கொண்டு வந்தார்.

கருணாநிதி தமிழகம் எங்கும் டாஸ்மாக் கடைகளை கொண்டு வந்தார். 65 ஆண்டுகளாக ஆனைமலை-நல்லாறு திட்டத்தை செயல்படுத்தவில்லை. தமிழகத்தின் உரிமையை கொஞ்சம், கொஞ்சமாக கேரளாவுக்கு விட்டுக் கொடுக்கிறார் தமிழக முதல்-அமைச்சர். ஓணம் பண்டிகைக்கு மலையாளத்தில் வாழ்த்துக்கள் சொன்ன தமிழக முதலமைச்சருக்கு அந்த மாநில முதலமைச்சருடன் பேசி ஆனைமலை-நல்லாறு திட்டத்தை செயல்படுத்த சொல்ல முடியாதா? ஒரே ஒரு குடும்பத்துக்காகத் தான் இந்த அரசு செயல்படுகிறது. அடித்தட்டு மக்களுக்காக செயல்படவில்லை.

இந்தியாவிலேயே தமிழகம் தான் 7 லட்சத்து 53 ஆயிரம் கோடி கடனாளி. தமிழகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் கடனாளியாகத்தான் பிறக்கிறது. அமாவாசையையும், ஆயிரம் ரூபாயையும் தி.மு.க.வினர் நம்பிக் கொண்டு இருக்கிறார்கள். பாராளுமன்ற தேர்தலுக்காக தி.மு.க. போடும் நாடகம் தான் மகளிர் உரிமைத் தொகை. வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் சாயம் வெளுக்கப்போகிறது.

மத்தியில் தி.மு.க. ஆட்சியில் இருக்கும் போது தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. ஆனால் அவர்களே நீட் தேர்வை எதிர்க்கின்றனர். பிரச்சினைகளை கிளப்பி மக்களை ஏமாற்றுவது தான் தி.மு.க.வின் வேலை’’இவ்வாறு அவர் கூறினார்.

அண்ணாமலை கோவை மாவட்டத்தில் இன்று 2-வது நாள் நடைபயணம் மேற்கொள்கிறார். தொண்டாமுத்தூர் தொகுதி குனியமுத்தூரில் மாலை 3 மணிக்கு நடைபயணத்தை தொடங்குகிறார். தொடர்ந்து அவர் கிணத்துக்கடவு தொகுதியிலும் நடைபயணம் மேற்கொள்கிறார். வருகிற 28-ந் தேதி வரை அவர் கோவையில் முகாமிட்டு நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal