சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று சிறைக்கு செல்வதற்கு முன் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று சசிகலா சபதம் எடுத்தார். அந்த சபதம் விரைவில் நிறைவேறப் பேகிறது என்கிறார்கள் அவரது ஆதாரவாளர்கள்!

தமிழகத்தில் அண்ணாமலைக்கும், அ.தி.மு.க.வுக்குமான இடையே ஏற்பட்ட பணிப்போர் தற்போது முற்றி வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. இந்த நிலையில்தான் நாளை முக்கிய முடிவு எடுப்பதற்கு எடப்பாடி பழனிசாமி தயாராகிவிட்டார்.

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் கடந்த 4 ஆண்டுகளாக பாஜக இடம்பெற்றிருந்தது. வருகிற நாடாளுமன்ற தேர்தலை இரண்டு கட்சிகளும் ஒன்றினைந்து சந்திக்க திட்டமிட்டிருந்தது. ஆனால் அதிமுக- பாஜக இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டது. தமிழகத்தில் யார் எதிர்கட்சி என்ற நிலைப்பாட்டில் சர்ச்சை ஏற்பட்டது. இந்தநிலையில் மறைந்த முதலமைச்சர் அண்ணா மற்றும், ஜெயலலிதா தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்து பேசியது மேலும் மோதலை அதிகரித்தது. இதனையடுத்து அதிமுகவினர் அண்ணாமலையின் கருத்திற்கு பதிலடி கொடுத்தனர். இந்த கருத்து மோதல் உச்சகட்டத்தை அடைந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக அறிவித்தது.

இதனையடுத்து இரு தரப்பையும் சமானதனம் செய்யும் முயற்சி நடைபெற்றது. அதிமுக மூத்த நிர்வாகிகள் தங்கமணி, வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் பாஜக தேசிய தலைமையை சந்திக்க டெல்லி சென்றனர். ஆனால் அமித்ஷாவை சந்திக்க திட்டமிட்டிருந்த நிலையில், அவரை சந்திக்க முடியாமல் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை மட்டும் சந்தித்து தங்களது புகாரை தெரிவித்து வந்தனர்.

ஏற்கனவே, எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார் அமித்ஷா! அப்போது, அவர் வைத்த நிபந்தனைகளைப் பார்த்து எடப்பாடி பழனிசாமி அப்படியே ஆடிப்போய்விட்டாராம். அதனால்தான், தனது சிஷ்யர்களை டெல்லிக்கு அனுப்பினார். அவர்கள் சென்றதும் தோல்வியில் முடிந்த நிலையில்தான், நாளை அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி!

இந்த நிலையில்தான், சசிகலாவின் ஆதாரவாளர்கள் சிலரிடம் பேசினோம்.

‘‘சார், அரசன் அன்று கொல்வான்… தெயவம் நின்று கொல்லும்… என்பார்கள்! அதாவது மனிதர்கள் செய்யும் தவறுக்கு ‘அரசன் உடனே தண்டனை அளிப்பார்! ஆனால் தெய்வமோ பொறுமையாக காத்திருந்து தண்டனை அளிக்கும்’ என்பது ஆன்றோர் வாக்கு. இதற்கு எடுத்துக்காட்டாக எத்தனையோ சம்பவங்களைச் சொல்லலாம். ஆனால், தற்போது தெய்வமும் ‘அன்றே’ கொல்கிறது. நாம் செய்யும் செயலுக்கான தண்டனை அடுத்த ஜென்மத்தில் கிடைப்பதில்லை அப்போதே கிடைக்கிறது. அதுதான் எடப்பாடிக்கும் காத்திருக்கிறது.

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அ.தி.மு.க. உடைந்து ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டது. அப்போது, சிறைக்கும் செல்லும் தருவாயிலும் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கிவிட்டு சிறை சென்றார் சசிகலா. அதன் பிறகு நடந்ததை மீண்டும் மீண்டும் சொல்ல அவசியமில்லை.

முதலமைச்சர் ஆன பிறகு எடப்பாடிக்கு கொடுக்கப்பட்ட குடைச்சல்களை, ‘ஓய்வு பெற்ற’ உச்ச அதிகாரத்தின் மூலம் மேலிடத்தை தன்வசப்படுத்தினார் எடப்பாடி பழனிசாமி. அதற்கப்புறம் என்ன? அவர் நினைத்ததை சாதித்தார். எல்லோரையும் ஓரங்கட்சினார். கட்சியை தன்வசப்படுத்தினார். தற்போதுதான் மீண்டும் எடப்பாடி பழனிசாமிக்கும், பி.ஜே.பி மேலிடத்திற்கும் முட்டல் மோதல் ஆரம்பித்தது. இதுதான் சசிகலாவின் ஆதரவாளர்கள் எதிர்பார்த்தது.

இந்த நிலையில்தான், எடப்பாடி பழனிசாமிக்கும், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கும் கடுமையான வார்த்தைப் போர் முற்றியது. அதாவது, அண்ணாமலையை அ.தி.மு.க.வின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் கடுமையாக தாக்கினார்கள். இதனை பி.ஜே.பி. மேலிடம் ரசிக்கவில்லை. ‘அ.தி.மு.க. & பா.ஜ.க.’ என்ற கண்ணாடி இழை தற்போது உடைந்துவிட்டது. இதனை மீண்டும் ஒட்ட நினைத்தாலும், ஒட்டாது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.விற்கு 20 தொகுதிகளை கொடுக்க வேண்டும் என மேலிடம் நிர்பந்திக்கிறது.

ஆனால், எடப்பாடி பழனிசாமி 20 தொகுதிகளை கொடுத்தால், அ.தி.மு.க.வின் உண்மையான தொண்டர்கள் ரசிக்க மாட்டார்கள். இந்த இக்கட்டான நிலையில்தான், எடப்பாடி பழனிசாமி தனத்துப் போட்டியிட்டால் என்ன என்று யோசிக்கும் போது, பா.ஜ.க.வும் மாற்றி யோசிக்க ஆரம்பித்துவிட்டது. எனவே, இனி எடப்பாடி பழனிசாமிக்கு நேரம் சரியில்லை… அவருக்கு இறங்கு முகம்தான். ஜெயலலிதாவின் சமாதியில் சசிகலா எடுத்த சபதம் விரைவில் நிறைவேறும். அதனைப் பொறுத்திருந்துப் பாருங்கள்’’ என்றனர்.

அ.தி.மு.க. & பா.ஜ.க. மோதல் பற்றி அண்ணாமலை தரப்பினர் சிலரிடம் பேசினோம்.

‘‘சார், அண்ணாமலை மீது அ.தி.மு.க.வினர் குற்றச்சாட்டு வைப்பதில் எந்தப் பலனில்லை . தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகுதான், இன்றைக்கு எழுச்சியுடன் கட்சி காணப்படுகிறது. அ.தி.மு.க.வினர் முதுகில் நாங்கள் சவாரி செய்வதாக அவர்கள் கூறுவது முற்றிலும் தவறு. எங்கள் முதுகில்தான் அவர்கள் சவாரி செய்கிறார்கள் என்பதை கூர்ந்து கவனித்தாலே புரியும். இது புரியவேண்டியவர்களுக்கு புரிந்திருக்கும்.

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.தான் எங்களுக்கு பலம் என்பதில்லை. ஏற்கனவே அ.தி.மு.க.வே பலமிழந்து காணப்படுகிறது. அ.தி.மு.க.வின் வாக்குகளாக இருக்கும் முக்குலத்தோர் வாக்குகள் தற்போது சிதறி கிடக்கிறது. ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோரை எடப்பாடியின் சுயநலத்திற்காக கட்சியிலிருந்து ஓரங்கட்டிவிட்டார்.

இன்றைக்கு தென்மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு பெரிதாக செல்வாக்கு இல்லை. நீங்கள் மதுரை மாநாட்டைச் சொல்லலாம். எந்தக்கட்சி பொதுக்கூட்டத்தை நடத்தனாலும், பணம் கொடுத்தால் கூட்டம் கூடத்தான் செய்கிறது. எனவே, அது வாக்குகளாக மாறுமா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. இன்றைக்கு பா.ம.க.வும் தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

எனவே, வரும் பாராளுடன்றத் தேர்தலில் அ.தி.மு.க. எங்களுடன் வரவில்லை என்றால், ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன், சசிகலா உள்பட சில கட்சிகளை கூட்டணியில் இணைத்து போட்டியிடத் தயாராகி வருகிறார் அண்ணாமலை. எனவே, அ.தி.மு.க. தயவில் நாங்கள் இல்லை’’ என்றனர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா சமாதியில் சசிகலா எடுத்த சபதத்தை சைலண்ட்டாக நிறைவேற்றி வருகிறார் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal