சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே புளியங்குறிச்சியில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது வாங்கும் குடிமகன்கள் புளியங்குறிச்சி பஸ் நிறுத்தம், நீரோடை, பள்ளி வளாகம் உள்ளிட்ட பொது இடங்களில் அமர்ந்து குடித்து வந்தனர். மேலும் கல்வராயன்மலையில் இருந்து கடத்தி வரும் சாராயத்தையும் விற்று வந்தனர். இதனால் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடந்து வந்தது. இதை தடுக்க புளியங்குறிச்சி எல்லை பகுதியில் மது அருந்த, விற்க ஊராட்சி நிர்வாகம் தடை விதித்து உள்ளது.

மேலும் கிராம கட்டுப்பாட்டை மீறி மது குடிப்பவர்கள், விற்பவர்களை போலீசாரிடம் ஒப்படைக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக கிராம பகுதிகளில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டு உள்ளது. அந்த பலகையில் ‘புளியங்குறிச்சி ஊராட்சியில் மது விற்க தடை செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் மது அருந்துவோர் மீது போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து தலைவாசல் புளியங்குறிச்சியில் மது அருந்துவோர் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal