அ.தி.மு.க.வில் அதிக சீட்டுகளைக் கேட்டு பா.ஜ.க. மேலிடம் நெருக்கடி கொடுப்பதாலும், இரண்டாம் கட்டத் தலைவர்களை உதாசீனப்படுத்துவதாலும், எடப்பாடி பழனிசாமி மாற்றி யோசிக்க ஆரம்பித்துவிட்டாராம்.

பா.ஜ.க. மேலிட வட்டாரம் மற்றும் எடப்பாடிக்கு நெருக்கமானவர்கள் சிலரிடம் பேசினோம்.

‘‘ பாஜவுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்த பிறகு அண்ணாமலையை மாற்றும்படி டெல்லியில் அமித்ஷாவை சந்திக்க ரகசியமாக அதிமுக மாஜி அமைச்சர்கள் சென்றனர். அங்கு அவரை சந்திக்க முடியாததால் நட்டாவை சந்தித்துள்ளனர். அதிமுக தலைவர்களின் செயலால் அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக -& பாஜ கூட்டணி அமைத்து போட்டியிட்டனர். ஆனாலும், அதில் மக்களவை தேர்தலில் 39 தொகுதிகளில் 1 தொகுதியில் மட்டுமே ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் வெற்றி பெற்றார். 38 இடங்களில் அதிமுக தோல்வியடைந்தது. சட்டப்பேரவை தேர்தலிலும் படுதோல்வியடைந்தது.

ஆனால், அதிமுக தயவால் பாஜவுக்கு 4 எம்எல்ஏக்கள் கிடைத்தனர். இதனால், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமியை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று பாஜக கூறி வந்தது. ஆனால் பாஜக கூட்டணியால்தான் தோற்றோம் என்று சி.வி.சண்முகம் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் குற்றம்சாட்டினர். இந்நிலையில் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை அதிமுகவையும், அதிமுக முன்னணி தலைவர்களையும் தொடர்ந்து விமர்சிக்க தொடங்கினார்.

இதற்கு, அதிமுக 2ம் கட்ட தலைவர்கள் உடனுக்குடன் பதிலடி கொடுத்தனர். ஆனாலும் அண்ணாமலை அதை கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து, டெல்லியில் கடந்த சில மாதங்களுக்கு முன் பாஜக மூத்த தலைவர் அமித்ஷாவை சந்தித்து எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை பற்றி புகார் தெரிவித்தார். ஆனால் அமித்ஷாவோ மற்றொரு அறையில் இருந்த அண்ணாமலையை வரச்சொல்லி இரு தரப்பினரையும் ஒன்றாக நிற்க வைச்சு போட்டோ எடுத்து சமரசமாகிட்டோம்னு வெளியில் பேட்டிக் கொடுக்கச் சொல்லி விட்டார் அமித்ஷா. அவர் சொன்னபடி இரு தரப்பினரும் பேட்டி கொடுத்து விட்டு சென்னை திரும்பினர். இதனால் சில மாதங்கள் அதிமுகவை பற்றி விமர்சனம் செய்யாமல் இருந்தார்.

ஆனால் தற்போது அண்ணாமலை மீண்டும் அதிமுகவை மட்டுமல்லாமல், மறைந்த முதல்வர்கள் அண்ணா, ஜெயலலிதா மற்றும் பெரியார் பற்றி விமர்சித்து வருகிறார். இதற்கு உடனடியாக பதிலடி கொடுத்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘‘தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜ இல்லை” என்று அதிரடியாக அறிவித்தார். இதனால் அதிமுக தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். பட்டாசு வெடித்தனர். அதோடு நிற்காமல் நன்றி மீண்டும் வராதீர்கள் என டிவிட்டரில் டேக் போட்டு டிரென்ட் ஆக்கினர்.

ஆனால், திடீரென தமிழக பாஜ பற்றியோ, அண்ணாமலை பற்றியோ யாரும் விமர்சனம் செய்யக்கூடாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2 நாட்களுக்கு முன் உத்தரவிட்டதாக கூறப்பட்டது. இதனால் அதிமுக 2ம் கட்ட தலைவர்கள் அமைதியாகினர். பாஜவை தொடர்ந்து விமர்சித்து வந்த ஜெயக்குமாரும், சென்னையில் இருக்கக்கூடாது என்று கட்சி மேலிடம் கூறியதால், அவர் தற்போது கொடைக்கானலில் தங்கியிருக்கிறார்.

இதந்கிடையே, மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசும்போது, பிரதமராக மீண்டும் மோடி வர அதிமுக ஆதரவு அளிக்கும். தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பாஜ ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.ஆனால், இதற்கு உடனடியாக பதிலடி கொடுத்த அண்ணாமலை, பிரதமராக மோடி வர தமிழக பாஜ மற்றும் கூட்டணி கட்சிகள் உறுதியாக உள்ளது. அதேநேரம், தமிழகத்தில் அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை நாங்கள் (பாஜக) ஏற்றுக்கொள்ள மாட்டோம். தமிழகத்தில் பாஜவை வளர்க்க தான் நாங்கள் பாடுபடுவோம் என்றார். இப்படி தொடர்ந்து அதிமுகவை அண்ணாமலை விமர்சித்து வந்ததாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக முன்னணி தலைவர்கள் கோபம் அடைந்துள்ளனர். இப்படி இருந்தால் இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட முடியாது.

அப்படியே கூட்டணி அமைத்தாலும் இரண்டு கட்சி தொண்டர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த கூட்டணி தோல்விதான் அடையும். அதனால் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையை மாற்றினால் மட்டும்தான் தமிழகத்தில் அதிமுக & பாஜ கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட முடியும் என்ற நிலை உள்ளதாக அதிமுக தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதை டெல்லி தலைமைக்கும் வலியுறுத்துவதற்காக, அதிமுகவின் 2ம் கட்ட தலைவர்களான வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் நேற்று டெல்லி சென்று முகாமிட்டனர். அங்கு ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்துப் பேசினர்.

அப்போது அண்ணாமலையை பற்றி புகார் தெரிவித்தனர். ஆனால் அவரோ தான் தற்போது தமிழக பாஜவை கவனிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இதனால் அமித்ஷாவை சந்திக்க நேரம் வாங்கி தரும்படி அவரிடம் கூறியுள்ளனர். அவர் அமித்ஷாவை சந்திக்க நேரம் வாங்கித் தருவதாக கூறினார். அதேநேரத்தில் டெல்லியில் தங்கியுள்ள வானதி சீனிவாசன் மூலமாகவும் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டு டெல்லியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் காத்திருந்தனர். ஆனால், அமித்ஷா, அதிமுக தலைவர்களை சந்திக்க விரும்பவில்லை. நட்டாவை சந்தித்து என்ன சொல்லணுமோ சொல்லிட்டு சென்னை கிளம்புங்கள் என்று கூறிவிட்டார்.

இதனால் நேற்றிரவு நட்டாவை சந்தித்துப் பேசினர். அப்போது, அண்ணாமலை தமிழக பாஜ மாநில தலைவராக இருந்தால் தொண்டர்கள் மத்தியில் ஒருங்கிணைப்பு இருக்காது. தோல்விதான் ஏற்படும். இதனால் நீங்கள் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால் அவரோ அமித்ஷா கவனத்துக்கு கொண்டு செல்கிறேன் என்று கூறிவிட்டு அனுப்பி விட்டார். இதனால் அமித்ஷாவை சந்திக்க முடியாமல் முன்னாள் அமைச்சர்கள் ஏமாற்றமடைந்து விட்டனர். கூட்டணிக் கட்சியின் தலைவரைக் கூட சந்திக்க முடியாமல் சென்னை திரும்புவது அதிமுக -பாஜ கூட்டணியில் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது’’ என்றவர்கள்,

மேலும் பேசியவர்கள், ‘‘இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி கூட்டணி வியூகத்தை மாற்றி யோசிக்க ஆரம்பித்துவிட்டாராம். காரணம், நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகுதான் கூட்டணி, தொகுதி பங்கீடு என முடியும். சமீபகாலமாக நடக்கும் தேர்தல்களில் வேட்பு மனு தாக்கல் செய்யுறும் இறுதிநாளன்று கூட தொகுதி பங்கீடுகள் வேட்பாளர்களை முடிவு செய்கின்றனர்.

எனவே, காங்கிரஸ் கூட்டணியில் இருந்து சமீபத்தில் கம்யூனிஸ்டுகள் வெளியேறியது போல, தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியிலிருந்து கூட காங்கிரஸ் வெளியேறலாம். காரணம், கரூர், திருச்சி, தர்மபுரி உள்ளிட்ட 4 தொகுதிகளில் இந்த முறை தி.மு.க. போட்டியிடுகிறதாம். மேலும் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. பேச்சு வார்த்தை நடந்து முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான், தி.மு.க. காங்கிரசுக்கு குறைவான சீட்களை கொடுக்கும் பட்சத்தில், அ.தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றாலும் ஆச்சர்யப்படுதவற்கில்லை என்கிறார்கள். அதே போல், வி.சி.க., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் அ.தி.மு.க.வில் சேர வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.

அ.தி.மு.க.விற்கு பா.ஜ.க. மேலிடம் தொடர்ச்சியாக நெருக்கடி கொடுக்கும் பட்சத்தில் எடப்பாடி பழனிசாமி மாற்றி யோசிக்கவும் தயாராகி வருகிறாராம்’’

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal