தமிழக முதல்வரின் மகனும், இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ‘சனாதம்’ குறித்த சர்ச்சை பேச்சு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மனுதாரர் மீண்டும் மீண்டும் முறையிட்டதால், வழக்கை ஏற்று உதயநிதிக்கு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். இந்த மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பேசியது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின், ‘சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். அதற்கு முதலில். வாழ்த்துகள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம்” என்றார். இதையடுத்து சனாதன தர்மத்தை அழிப்பதாகவும், இந்து மதத்தை அழிப்பதாகவும் உதயநிதி பேசியதாக பாஜக தலைவர்கள் குற்றம்சாட்டினர்.
உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக போலீஸ் நிலையங்கள் புகார்கள் செய்யப்பட்டன. இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவருக்கு கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டன. அதோடு சனாதன மாநாட்டில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் உள்ளது. இதனை அறிந்தே அவர் பேசியுள்ளார். அவரது பேச்சு உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உள்ளது. அதோடு குறிப்பிட்ட மக்களின் நம்பிக்கையை புண்படுத்தும் வகையில் உள்ளது. அவர் மீது தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது. இதனை அவசர வழக்காக விசாரிக்க கோரிய நிலையில் அதனை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.
இதற்கிடையே தான் சனாதான ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபுவுக்கு எதிராகவும், சிபிஐ விசாரணை கோரியும் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜெகன்நாத் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘‘சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு பங்கேற்றது அரசிலமைப்பு சாசனத்திற்கு முரணானது என அறிவிக்க வேண்டும். அதோடு சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டின் பின்னணியை கண்டறிய சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’’என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் மனு இன்று 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் எடுத்தவுடன், ‘‘இந்த மனுவை நாங்கள் ஏன் விசாரிக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தை எதற்காக நாடினீர்கள்?” என கேள்வி எழுப்பினார்கள். அதற்கு மனுதாரர் தரப்பில், ‘‘இந்தியாவில் உச்சப்பட்ச நீதிமன்றம் உச்சநீதிமன்றம் தான் அதனால் தான் இங்கு அணுகினோம்’’ என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள், ‘‘உயர்நீதிமன்றத்தை நீங்கள் நாடியிருக்கலாம். எந்த உயர்நீதிமன்றத்தை வேண்டுமானாலும் நீங்கள் நாடலாம்” எனக்கூறி வழக்கை விசாரிக்க மறுப்பு தெரிவித்தனர்.
ஆனால் மனுதாரர் தரப்பில் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துகளை குறிப்பிடப்பட்டன. குறிப்பாக சனாதன அழிப்பு, கொசு உள்பட பிற நோய்களுடன் ஒப்பிட்டு பேசியதை மனுதாரர் சுட்டிக்காட்டி கொண்டிருந்தார்.
இதையடுத்து தான் வழக்கை நீதிமன்றம் ஏற்றது. அதன்பிறகு தான் தனது பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலினும், சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர்கள் பங்கேற்றது குறித்து தமிழக அரசும் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் பிறப்பிப்பதாக தெரிவித்தனர்.