தலைமை செயலகத்தில் இன்று காலை அதிமுக எம்.எல்.ஏ.-க்கள், சபாநாயகரை (அப்பாவு) சந்தித்தனர். அப்போது ஓ.பன்னீர் செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் இருக்கைகள் மாற்ற வேண்டும். எதிர்க்கட்சி துணைத் தலைவரை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர். சட்டமன்ற தேர்தல் 2021-ல் நடைபெற்றபோது எடப்பாடி பழனிசாமி, ஓ…பன்னீர் செல்வம் ஆகியோர் இணைந்து தேர்தலை சந்தித்தனர்.
எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராகவும், ஓ.பன்னீர்செல்வம் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர். அதன்பின் இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமி அதிமுக-வின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து பழனிசாமி அதிரடியாக நீக்கினார். அதேபோல் ஓ. பன்னீர் செல்வமும் அவர்களை நீக்குவதாக அறிவித்தார்.
அதிமுக-வின் எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து ஓ. பன்னீர் செல்வம் நீக்கப்பட்டு, உதயகுமார் தேர்வு செய்யப்பட்டதாக அதிமுக-வின் எடப்பாடி பழனிசாமி அணி தெரிவித்திருந்தது. இதுகுறித்து சட்டசபை சபாநாயகர் அப்பாவு-யிடம் அதிமுக உறுப்பினர்கள் கடிதம் வழங்கினர். இருந்தாலும் அப்பாவு இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கவில்லை. இதற்கிடையே, அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தது செல்லும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்த வழக்கிலும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில், அடுத்த மாதம் 9-ந்தேதி சட்டமன்றம் கூட இருப்பதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏ.-க்கள் சபாநாயகரை சந்தித்து இருக்கைகள் தொடர்பாக வலியுறுத்தியுள்ளனர். முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக ”சட்டப்பேரவைத் தலைவர் என்ற முறையில், ஜனநாயக முறையிலும், சட்டப்படி, விதிப்படி, நியாயமாக, ஒருதலைபட்சமின்றி தக்க நடவடிக்கை எடுப்பேன்.
எனக்கோ அல்லது முதல்வருக்கோ, தனிப்பட்ட முறையில் யார் மீதும் விருப்பு, வெறுப்பு எதுவும் கிடையாது. சட்டப்பேரவை விதிகளை ஆராய்ந்தும், வழக்கறிஞர்களுடன் ஆலோசித்தும் தக்க முடிவு எடுப்பேன் என அப்பாவு தெரிவித்திருந்தார்” என்பது குறிப்பிடத்தக்கது.