தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் ‘தி.மு.க.வில் உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்’ என்ற வார்த்தையை அடிக்கடி உதிர்ப்பார்கள்.
தமிழகம் முழுவதும் உழைக்கும் உடன் பிறப்புக்களுக்கு பல்வேறு அணிகளில் பதவி கொடுத்து அழகு பார்த்திருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அதே போல், மலைக்கோட்டை மாவட்டத்தின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கும் அமைச்சர் கே.என்.நேருவும் உழைக்கும் உடன் பிறப்புக்களை விட்டுக்கொடுத்ததாக சரித்திரம் கிடையாது.
இந்த நிலையில்தான் திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினரும், வழக்கறிஞருமான தீபா சின்னராஜ், தனது பிறந்த நாளையொட்டி நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து ஆசிபெற்றிருக்கிறார்.
உப்பிலியபுரம் ஒன்றியத்தைப் பொறுத்தளவில் ‘கமிஷன்… கரப்ஷன்… பினாமி பெயரில் கான்ட்ராக்ட்…’ என இருக்கும் நிர்வாகிகளுக்கு மத்தியில், எந்தவொரு பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் கட்சிக்காகவும், கட்சி நிர்வாகிகள் நலனுக்காகவும் பாடுபடுபவர் தீபா சின்ராஜ். கொரோனா காலகட்டத்தில் அமைச்சரின் மகன் அருண் நேரு பச்சைமலைக்கு வந்தபோது, ஏராளமான நலத்திட்ட உதவிகளை செய்து அசத்தியவர் தீபா சின்ராஜ்!
இந்த நிலையில்தான் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட இருப்பதால், அதற்கான களப்பணிகளில் இறங்கி வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார் தீபா சின்ராஜ். இவரது பிறந்தநாளான இன்று அமைச்சர் கே.என்.நேரு மனமார வாழ்த்தி ஆசி வழங்கியிருக்கிறார்.