அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்குவது தொடர்பாக கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டது.

அதன்படி, அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இதனிடையே, இந்த வழக்கை எம்பி எம்எல்ஏக்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து, ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை எந்த நீதிமன்றம் விசாரிப்பது என குழப்பம் நீடித்து வந்தது. இது தொடர்பான பிரச்சினையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமே செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு நடைபெற்று வந்தது. இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், ஜாமீன் மனு கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனு மீது செப்டம்பர் 20ஆம் தேதி (இன்று) தீர்ப்பு வழங்கவுள்ளதாக நீதிபதி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக, வழக்கு விசாரணையின்போது, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal