தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டது எந்தளவிற்கு வரவேற்பை பெற்றதோ, அதே அளவிற்கு விமர்சனத்தையும் பெற்றிருக்கிறது.
ஏழை எளிய மக்கள் பலனடையும் வகையில் அண்ணா பிறந்தநாளன்று மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டது. ஆனால், அதற்கு முந்தைய தினமே பலரது வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டது.
கள ஆய்வில் ஈடபட்ட அலுவலர்கள் முறையாக விசாரிக்காமல் தகுதியில்லாத பலருக்கு ஆயிரம் ரூபாயை பெற தகுதியானவர்கள் என பரிந்துரைத்ததாகவும், தகுதியானவர்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இந்த நிலையில்தான் பணம் கிடைக்காதவர்களுக்கு, ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் தாங்கள் விண்ணப்பம் செய்துள்ளீர்கள்.
தங்கள் விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளது. கள ஆய்வுக்குப் பின் உரிய முடிவு எடுக்கப்படும்’ என எஸ்.எம்.எஸ். வந்திருக்கிறது.
இதற்கிடையே, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என தற்போது வரை தன்னை கூறிக்கொள்ளும் வி.கே.சசிகலா, ‘‘ எங்க வீட்டுல உள்ள ஒரு பையனுக்கு, ‘உங்க அக்கவுண்ட்டில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது’ என கூறியிருக்கிறார்கள். அந்தப் பையன் விண்ணப்பிக்கவே இல்லை. எனவே இந்த திட்டத்தில் குளறுபடிகள் அதிகமாக நடந்திருக்கிறது.
எனவே, விண்ணப்பிக்காத எனக்கு தெரிந்த நபருக்கே ஆயிரம் ரூபாய் வந்திருக்கும் போது, இந்த திட்டம் எப்படி சரியான பயனாளிகளைப் போய் சேர்ந்திருக்கும். இந்த திட்டம் தி.மு.க.விற்கு மேலும் பின்னடைவைத்தான் தரும்’’ என்று பேசியிருக்கிறார்.