மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தில் தகுதி இல்லாதவர்களுக்கும் பணம் சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

குறிப்பாக திருச்சி புறநகர் பகுதி மற்றும் திண்டுக்கல், மதுரை உள்பட சில மாவட்டங்களில் கிராம நிர்வாக அலவலர்கள், பஞ்சாயத்து கிளர்க்குகள் மற்றும் கிராம நிர்வாக உதவியாளர்கள் களப்பணிக்கு சென்று ஆய்வு நடத்த அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். இவர்கள் அரசியல் கட்சியினர் உத்தரவிற்கிணங்க தகுதியில்லாதவர்களுக்கும் உரிமைத் தொகை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தகுதியுள்ள பலரும் பணம் கிடைக்காமல் விரக்தியில் இருப்பதாகவும், சிலர் சாலை மறியிலில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வந்தன.

இந்த நிலையில்தான், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

‘‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் ஏற்கப்பட்ட விண்ணப்பங்கள் போக மீதமுள்ள விண்ணப்பங்கள் கள ஆய்வுக்குட்படுத்தி அதன் அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்து விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணிற்கு 29.9.2023 வரை குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்கள் குறித்த விவரமறிய, மாவட்ட கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட உதவி மையத்தினை தொடர்பு கொண்டு தங்களுடைய ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண் ஆகிய விவரங்களுடன் தங்களுடைய விண்ணப்பம் பற்றிய விவரங்களை எவ்வித கட்டணமும் இன்றி அறிந்து கொள்ளலாம்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் மகளிர் உரிமைத் திட்டத்தில் தான் தகுதியானவர் என கருதும்பட்சத்தில் இ-சேவை மையம் மூலமாக சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர்களிடம் மேல்முறையீடு செய்யலாம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் குறித்த நிலை அறியவோ, மேல்முறையீடு செய்யவோ எந்த கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள்ளாக தீர்வு காணப்படும். தகுதியற்ற பயனாளிகள் ஒருவேளை தவறுதலாக தேர்வாகி இருந்தால் அது குறித்த குறிப்பான தகவல்களையும் தெரிவிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்கள் குறித்த தகவல்களை மாவட்ட கலெக்டர் அலுவலக உதவி மைய எண் 9003758638-யை அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்’’ இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தகுதியற்றவர்கள் பலனடைந்து தகுதியுள்ளவர்கள் பலனடையாமல் இருந்தால், அது தவறுதானே?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal