தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் ‘ஆடுபுலி’ ஆட்டத்தால் நேற்று கர்நாடகாவில் நடந்த நிலைமை, நாளை தமிழக பா.ஜ.க.விற்கு ஏற்படும் என்கிறார்கள் தமிழக அரசியல் பார்வையாளர்கள்!
இது பற்றி தமிழக அரசியல் நோக்கர்கள் சிலரிடம் பேசினோம்.
‘‘சார், அண்ணாமலை தனது ஐ.பி.எஸ். பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அரசியலுக்கு வந்ததால், தன்னை ஒரு பெரிய ‘பிம்பமாக’ நினைத்துக்கொண்டிருக்கிறார். அரசியல் களம் என்பது ஆளானப்பட்ட நேர்மையான அரசியல் தலைவர்களையே தோற்கடித்துவிடும் என்பதை அண்ணாமலை விரைவில் உணர்வார்.
நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில், அம்மாநில ‘பா.ஜ.க.விற்கு புது ரத்தம் பாய்ச்சுகிறேன்… கட்சியை வேறு மாதிரி கட்டமைக்கிறேன்’ என்று கூறிவிட்டு வெற்றி வாய்ப்பு இருப்பவர்களுக்கு சீட் கொடுக்கப்படவில்லை. சரியான கட்டமைப்பையும் உருவாக்கவில்லை. விளைவு, அக்கட்சி அம்மாநிலத்தில் படுதோல்வியை சந்தித்தது.
தோல்வியடைந்த பிறகும், ‘கட்டமைப்பை ஏற்படுத்தியிருக்கிறோம். விரைவில் கட்சி புதிய பாதையை நோக்கி செல்லும்’ என்றார். அதுவெல்லாம் அரசியலில் நடக்காதது. ஒரு மாநிலத்தில் ஒரு கட்சி எந்தளவிற்கு மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை கொடுத்தாலும், ஐந்தாண்டுகளில் ‘எதிர்ப்பு’ என்பது ஏற்படும். இதற்கு புது ரத்தமும் தேவையில்லை…. புதிய கட்டமைப்பும் தேவையில்லை..!
கர்நாடகாவில் உயர் போலீஸ் அதிகாரியாக இருந்தார் என்ற ஒரே காரணத்திற்காக அவருக்கு தேர்தல் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை கொடுத்தது ‘மேலிடம்’! அந்த வாய்ப்பை தவறவிட்டுவிட்டார்.
தமிழகத்திற்கு வருவோம்… தமிழகத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பதற்கே அரசியல் கட்சிகள் அஞ்சி வருகின்றன. இந்த நிலையில்தான் அ.தி.மு.க., ‘பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தால் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’ என்று தெரிந்தும் கூட்டணி வைத்தனர். ஆனாலும், அண்ணாமலை ஜெயலலிதா, அண்ணா போன்ற மக்கள் மதிக்கக்கூடிய தலைவர்களைப் பற்றி அவதூறாக பேசினார்.
அண்ணாமலையின் பேச்சு அ.தி.மு.க. மட்டுமல்ல தி.மு.க.வில் உள்ள தொண்டர்களையும் கொதிப்படைய வைத்தது. காரணம் கேட்டால், ‘நான் கும்மிடு போட்டு தலைவராகமாட்டேன்! குறுக்கு வழியிலும் செல்லமாட்டேன்! வசூலில் இறங்குவதும் என் வேலை கிடையாது’ என்று வீரவசனம் பேசுகிறார்.
மத்தியில் ஆளும் பி.ஜே.பி. எப்படியெல்லாம் பிற மாநிலங்களில் ‘அரசியல்’ செய்கிறது என்பது சிறு பிள்ளைகளுக்குக் கூடத் தெரியும். இது பத்து வருடம் கையில் துப்பாக்கியைப் பிடித்த, ஐ.பி.எஸ். அதிகாரிக்கு தெரியாதா? அரசியல் களத்தில் எப்படி பயணித்தால் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்பதை அண்ணாமலை உணரவேண்டும்.
ஊழலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட அண்ணா ஹசாரேவுடன் இருந்த கெஜ்ரிவால் இன்றைக்கு ‘அரசியல் சாணக்கியத்துடன்’ இரண்டு மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்து நடத்திக்கொண்டிருக்கிறார். அரவிந்த் கெஜ்ரிவாலின் சாணக்கியத்தனம் கூட அண்ணாமலைக்கு தெரியவில்லை. அண்ணாமலையில் பேச்சு… செயல்பாடுகள்… நடவடிக்கைகள்… இதே மாதிரி தொடர்ந்தால், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ‘அரசியல் பாலபாடத்தை’ கற்றுக்கொள்வார். அதற்கு பிறகு அவருடைய அரசியல் எதிர்காலமே கேள்விக்குறியாகும்’’ என்றனர்.
அரசியல் களத்தில் நல்லவனாக இருப்பதைவிட, வல்லவனாக இருக்க வேண்டும். அதே சமயம் ‘வாய்ஜாலம்’ மட்டும் போதாது என்பதை விரைவில் உணர்வார் அண்ணாமலை..!