சென்னை பனையூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்றிரவு ஆலோசனை நடத்தினார். ‘பாஜகவுடன் கூட்டணி இல்லை. கூட்டணியைப் பொறுத்தவரையில், பாஜக அதிமுக கூட்டணியில் இல்லை’ என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்த நிலையில் அண்ணாமலையின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

பாஜகவின் அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். தொடர்ச்சியாக மாநில நிர்வாகிகளிடமும் அண்ணாமலை ஆலோசனை நடத்தியதாக சொல்லப்படுகிறது. இன்று பொள்ளாச்சி மற்றும் வால்பாறையில் ‘என் மண்; என் மக்கள்’ யாத்திரை நடைபெற இருக்கிறது. ஆலோசனையின் முடிவில் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அண்ணாமலை கோவை சென்றார்.

முன்னதாக அண்ணா குறித்த அண்ணாமலையின் பேச்சுக்கு விளக்கமளித்துள்ள பாஜக நிர்வாகிகள், ‘வரலாற்று பூர்வமான ஒரு தகவலையே அண்ணாமலை தெரிவித்துள்ளார். அண்ணா குறித்து தெரிவித்த கருத்துக்களுக்கு ஆதாரம் அவரிடம் இருக்கிறது. எனவே அவரது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்க மாட்டார்’ என்று தெரிவித்தனர்.

முன்னதாக, அண்ணாமலை அளித்த பேட்டியில், ‘‘இங்கேயும் லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளது. தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மீது எல்லோருக்கும் பயம் உள்ளது. பாதுகாப்பு எல்லோருக்கும் தேவை தான். அதைமட்டும் நான் சொல்லுவேன். இன்றைக்கு ஒரு முடிவோடு தான் வந்துள்ளேன். கூட்டணி தேவை எல்லாருக்கும் உள்ளது.

எனக்கு கூட்டணி வேண்டாம் என சொல்வது என்ன போக்கு. கூட்டணி வேண்டாம் என்று யாரும் சொல்ல முடியாது. தனி மரம் என்றைக்கும் தோப்பாகாது. எல்லோருக்கும் எல்லோரும் தேவை. எல்லோருக்கும் அரசியல் பிரச்சினை உள்ளது. ஜனநாயகத்தில் அனைவரையும் ஒருங்கிணைத்து அனுசரித்து செல்ல வேண்டும். கூட்டணி வேண்டாம் என சொல்லக்கூடிய அளவுக்கு பலசாலிகளை தமிழ்நாட்டில் நான் பார்க்கவில்லை.

கூட்டணி வேண்டாம் என்று நாங்கள் நிர்பந்திக்கவில்லை. அவர்கள் கூறியதற்கு தான் நான் பதில் கூறுகிறேன். வெற்றி, தோல்வியை விட தன்மானத்தோடு இருப்பது முக்கியம். வெற்றிக்காக எங்களது கொள்கைகளை விட்டுக்கொடுக்க முடியாது. நாங்கள் எல்லோரையும் அரவணைத்துதான் செல்கிறோம். யாரையும் சிறுமைப்படுத்தவில்லை. பேச்சை தரைகுறைவாக யார் தொடங்கியிருக்கிறார்கள் என்று பாருங்கள். செல்லூர் ராஜு, சிவி சண்முகம் மாதிரி பேசுபவர்கள் பாஜகவில் உள்ளனர். அவர்களை நாங்கள் பேச சொன்னால் என்னவாகும். அது தவறு. பிரச்சினையை நேருக்கு நேர் பேச வேண்டும். மேடை, மைக் இருக்கிறது என்பதற்காக வாய்க்கு வந்ததை பேசக்கூடாது’’ இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இந்த திடீர் முடிவு பற்றி அவருக்கு நெருக்கமானவர்களிடம் பேசினோம்.

‘‘சார், எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க.வின் முன்னணி நிர்வாகிகள் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பதை விரும்பவில்லை. தமிழகத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்ததால்தான் நான்கு பா.ஜ.க. வேட்பாளர்கள் சட்டமன்றத்திற்குள் நுழைந்தனர்.

இந்த நிலையில்தான் திடீரென் இப்போதே ‘கூட்டணி முறிவு’ என்றால், ‘மேலிடம்’ அ.தி.மு.க.விற்கு நெருக்கடி கொடுக்கும். தேர்தல் தேதி அறிவித்த பிறகு அதிகாரப் பூர்வமாக ‘கூட்டணி முறிவு’ என எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் இதுதான் அவரது அடுத்த கட்ட நடவடிக்கை!

இதற்கிடையே மத்தியில் மீண்டும் பா.ஜ.க. வந்தால், அவர்களுக்கு அ.தி.மு.க. நிபந்தனையற்ற ஆதரவை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதே சமயம், தமிழகத்தில் அ.தி.மு.க. தனித்துப் போட்டியிட்டால் 35 இடங்களுக்கு மேல் வெற்றி வாகை சூடும் என்பதிலும் சந்தேகமில்லை என முன்னணி நிர்வாகிகள் எடப்பாடிக்கு ஆலோசனை கூறியிருக்கிறார்கள். எனவே, தேர்தல் தேதி அறிவித்தால், ‘நெருக்கடி’ கொடுக்க முடியாது என்பதால், எடப்பாடி பழனிசாமியின் அடுத்த கட்ட நடவடிக்கை அதிரடியாக இருக்கும்’’ என்றனர்.

இதற்கிடையே அண்ணாமலை பேசும்போது, ‘‘அரசியலில் கும்மிடு போட்டோ, குறுக்கு வழியிலோ செல்வதில் எனக்கு விருப்பமில்லை’’ என்றார். அப்படியானால், மத்தியில் ஆளும் பா.ஜ.க. நேர்மையான வழியில்தான், சில மாநிலங்களில் கட்சிகளை உடைக்காமல் ஆட்சியைப் பிடித்திருக்கிறதா என்ற கேள்விகளும் எழுகிறது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal