அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலுவை மாமா… மாமா… என்றுதான் அழைப்பார். அப்படி உறவுமுறைச் சொல்லி அழைக்கப்படும் மாமா, மாப்பிள்ளைக்கு அட்வைஸ் பண்ணியதற்கான காரணம் தற்போது வெளியாகியிருக்கிறது.
அரசியலில் இருப்பவர்கள் உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தையும் மிகவும் யோசித்துதான் உதிர்க்கவேண்டும். அப்படியிருக்கும்போது, தமிழகத்தினுடைய முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனும், இளைஞர்நலன் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், ‘சனாதனம்’ பற்றி பேசியதுதான் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது.
இந்த நிலையில் வேலூரில் நடந்த தி.மு.க.வின் முப்பெரும் விழாவில் பேசிய டி.ஆர்.பாலு, அமைச்சர் உதயநிதி பேசும் போது எச்சரிக்கையுடன் பேசவேண்டும் என்பதை மேடையிலேயே பேசியதுதான், தி.மு.க.வில் பல்வேறு விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
தி.மு.க. முப்பெரும் விழாவில் பேசிய டி.ஆர்பாலு, ‘‘உதயநிதி ர் என்ன வேண்டுமானாலும் பேசுகிறார். அவர் என்ன வேண்டுமானாலும் பேசலாம். பேசிவிட்டு அதனை சமாளிக்கலாம் என்ற நினைப்பில் பேசுகிறார். ஆனால் தனது கையில் வைத்து கொண்டிருக்கிற பொருள் கீழே விழுந்து உடைந்து விடக்கூடாது என்ற எண்ணத்தையும் மனதில் வைத்து கொண்டு மிகச்சிறப்பாக பணியாற்றுவது அவரது கடமை என்று நான் எச்சரிக்க விரும்புகிறேன். அதோடு நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் மிகவும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும் என்று அன்பு தம்பி மீது இருக்கும் பாசத்தின் காரணமாக, சிறுகுழந்தையில் இருந்து நான் தூக்கி வளர்த்த பிள்ளை என்பதன் காரணமாக இதை சொல்லி கொள்கிறேன்’’என்றார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கும் மேடையிலேயே டி.ஆர்.பாலு விடுத்த எச்சரிக்கை பற்றி சீனியர் ஒருவரிடம் பேசினோம்.
‘‘சார், சமீபத்தில்தான் டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜா அமைச்சரானார். இதற்கு முழுக்க முழுக்க ஆதரவு கொடுத்தது உதயநிதி ஸ்டாலின்தான். இப்படி இருக்கும்போது டி.ஆர்.பாலு உதயநிதிக்கு எச்சரிக்கை விடுக்கும் தொனியில் அவர்தானாக பேசவில்லை. தலைவர் சொல்லித்தான் பேசினார்.
காரணம், ‘சனாதனம்’ குறித்து உதயநிதி பேசியது, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வட இந்தியாவில் காங்கிரசுக்கு பலத்த அடியை ஏற்படுத்தும். இது தொடர்பாக காங்கிரஸின் மூத்த தலைவர்கள் சிலர் நேரடியாக மு.க.ஸ்டாலினை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள். இதன் உள்விவகாரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலினும் அறியாதவர் அல்ல!
அதனால்தான், தான் நேரடியாக சொல்ல முடியாததை டி.ஆர்.பாலுவின் மூலமாக முப்பெரும் விழாவிலேயே முதல்வர் ஸ்டாலின் சொல்ல வைத்திருக்கிறார். இது, கொதிப்பில் இருந்த காங்கிரஸ் மேலிடத்தை கொஞ்சம் குளிர வைத்திருக்கிறது. முதல்வர் சொல்லாமல், டி.ஆர்.பாலு ‘எச்சரிக்கை’ விடுக்கவில்லை’’ என்றனர்.
தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்களே… அதுதானா..?