‘நீங்கள் ஏன் பா.ஜ.க.வில் இணையக் கூடாது?’ என அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை கேட்டதாக பரபரப்பான வாதத்தை உயர்நீதிமன்றத்தில் முன் வைத்திருக்கிறார் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்!

செந்தில் பாலாஜியின் ஜாமின் மன்று இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் ஆஜரான கபில் சிபல், ‘நீங்கள் ஏன் பாஜகவில் இணையக்கூடாது என விசாரணையின் போது செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை கேட்டது’ எனபரபரப்பான வாதங்களை எடுத்து வைத்தார்.

இந்த நிலையில் மற்றொரு மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ வாதங்களை முன்வைக்கும்போது, ‘‘அமைச்சர் செந்தில் பாலாஜி மீது கூறப்படும் முறைகேடு அவர் அதிமுகவில் இருந்தபோது நடைபெற்றது. ஆனால் அவர் திமுகவில் சேர்ந்த பிறகே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜியிடம் கைப்பற்றப்பட்ட எலக்ட்ரானிக் பொருட்களை 6 நாட்கள் சட்ட விரோதமாக அமலாக்கத்துறை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. செந்தில் பாலாஜி குற்றம் செய்தாரா? இல்லையா என்பது குறித்து விசாரணையின் முடிவில் தான் தெரியவரும். எனவே ஜாமீன் வழங்க வேண்டும். செந்தில் பாலாஜி எங்கும் தப்பிச் செல்லமாட்டார். வேண்டுமென்றால் அவரது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கிறோம்’’ என வாதிட்டார்.

அதற்கு அமலாக்கத்துறை தரப்பு பதில் வாதங்களை முன்வைத்தது. அப்போது, ‘‘அமலாக்கத்துறை விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால் ஜாமீன் வேண்டும் என கோர முடியாது. அமைச்சர் செந்தில் பாலாஜி இன்னும் அமைச்சராக இருக்கிறார். சமூகத்தில் சக்தி வாய்ந்த நபராக உள்ளார்.

எனவே சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது. ஜாமீன் வழங்க கூடாது. ஜாமீன் கோருவதற்கு உடல் நிலை ஒரு காரணம் அல்ல. அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் இரண்டரை ஆண்டுகளாக சிறையில் உள்ளவர்களும் உள்ளனர். செந்தில் பாலாஜியின் எலக்ட்ரானிக் பொருட்களை சட்ட விரோதமாக வைத்திருந்ததாக கூறுவது தவறு. ஆவணங்களை சேகரிக்கும் நோக்கிலேயே எலக்ட்ரானிக் பொருட்களை அமலாக்கத்துறையால் கைப்பற்றப்பட்டது. செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’’என வாதங்களை வைத்தது அமலாக்கத்துறை.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து, ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. வரும் 20ஆம் தேதி, தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal