அதிமுகவில் பவர்புல் அமைச்சர், நெம்பர் டூ என்று வலம் வரும் தங்கமணியுடன் மல்லுகட்டும் திமுக மாவட்டச் செயலாளர் மதுரா செந்திலின் கதகளி ஆட்டம்தான் நாமக்கல் திமுகவின் ‘ ஹாட் டாபிக்.’

நாம்க்கல் மாவட்டம் திமுகவில் மேற்கு, கிழக்காக பிரிக்கப்பட்டிருக்கிறது. மேற்கு மாவட்டத்துக்கு மா.செயலாளராக வலம் வந்த எஸ்.கே.மூர்த்தியை மாற்றி விட்டு, உதயநிதி சாய்ஸான மதுரா செந்தில் ஒருவருடத்திற்கு முன் மா.செயலாளராக ஆக்கப்பட்டார். பதவி கொடுக்கும் போதே தங்கமணியை வீழ்த்தும் அசைண்மெண்ட் கொடுத்தே, இளைஞர் அணியில் இருந்த மதுரா செந்தில் மா.செயலாளர் ஆக்கப்பட்டார் என்ற பேச்சு பேசபட்டது. அசைன்மெண்ட் எப்படி இருக்கிறது என்று உடன்பிறப்புகளை கேட்க, மதுரா செந்தில் & தங்கமணி மோதல் அரசியல் பற்றி விவாரித்தார்கள் மூத்தஉடன்பிறப்புகள்.

‘‘ கே.எஸ்.மூர்த்தி கட்சிகாரங்கள கண்டுக்காதது, அதிமுகவோட குறிப்பா தங்கமணியோட அண்டர் டீலிங்ல இருந்தது தலைமைக்கு தெரிஞ்சிதான் அவர நீக்கிட்டு மதுராவை கொண்டு வந்திச்சு. மதுரா செந்தில் வந்தவுடனே ‘சின்ன வயசு, தங்கமணிக்கு எதிரா தாக்கு பிடிக்கமாட்டருன்னு காதுபடவே பலபேரு பேசினாங்க. தங்கமணி நாமக்கல் முழுமைக்கும்மா. செயலாளர இருந்தாலும், சொந்த ஊரு பள்ளிபாளையம் பக்கம் கோவிந்தம்பாளையந்தான்.

தங்கமணி தொகுதியும் மேற்கு மாவட்டத்தில இருக்கிற குமாரபாளையந்தான். தங்கமணிக்கு மேற்கு மாவட்டத்தில எல்லா விசயமும் அத்துபடி. அவர் எதிர்த்து அரசியல் செய்யறதும் லேசுபட்ட காரியமில்லை. மேற்கு மாவட்டத்தில மூனு சட்டமன்ற தொகுதியில பரமத்திவேலூர், குமாரபாளையம் அதிமுகவசம் இருக்கு. திருசெங்கோடு கொ.ம.தே.க. ஈஸ்வரன் வசம் இருக்கு.

திமுகவுக்குன்னு சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் இல்லாத சூழலிலும் திருச்செங்கோட்டுக்கு தலைமை மருத்துவமனை, பரமத்திவேலூருக்கு தலைமை இடத்து துணை மருத்துவமனை, திருச்செங்கோடு நகரத்துக்கு அவுட்டர் ரிங்ரோடு, அர்த்த நாரீஸ்வரர் கோயிலுக்கு 300 வருஷம் கழிச்சி புதியதேர், குமாரபாளையத்தில கட்டிடம் கட்டி நின்று போன தலூக்கா ஆபீஸ்க்கு கூடுதல்நிதி, பள்ளிபாளையத்துக்கும், குமாரபாளையத்துக்கும் கூட்டு குடிநீர் திட்டம், குமாரபாளையத்தில் புதியநூலகம், புதிய பஸ்நிலையம், பள்ளிபாளையம் புதிய நகராட்சி கட்டிடம், காவிரி தண்ணீ பள்ளி பாளையம் ஊருகுள்ள வரமா இருக்க தடுப்பணை இவ்வளவையும் தளபதி, அமைச்சர்கள் ஆதரவுல செஞ்சிருக்காரு மதுரா செந்தில்.

திருச்செங்கோட்டுல மாவட்ட திமுக அலுவலகத்தை புதுசா ஆரம்பிச்சி நேருவ கூட்டிவந்து திறந்தாரு. இப்ப அங்க இ- சேவைமையம் அமைச்சி மக்களுக்கு இலவச சேவை செய்யறாரு. ஒருநாளைக்கு குறைஞ்சபட்சம் 500 பொதுமக்கள் மாவட்ட ஆபிஸ்க்கு வந்துட்டு போறதுமா இருக்காங்க. மா.செயலாளர் ஆனா ஒரு வருஷத்திலயே இதெல்லாம் நடந்திருக்கு.

பள்ளிபாளையம், குமாரபாளையத்தில திமுகவினரே அதிமுககாரங்க கூட ரகசிய டீல் வச்சிகிட்டு சந்துகடை, நெம்பர் டூ லாட்டரி எல்லாம் அமோகமா நடந்திச்சி. பொதுமக்களுக்கு இடைஞ்சலா நெறய புகார் வந்தது. அதனால இதெல்லாம் அதிகமா புழங்ககூடாதுன்னு சொல்லிட்டாரு காவல் துறையில. இப்ப அதெல்லாம் மட்டுபட்டு போச்சு. திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் திமுக வசந்தான் இருக்கு. முக்கியமான பேரூராட்சிகள் பரமத்திவேலூர், ஆலாம்பாளையம் திமுக வசந்தான் இருக்குது.

கட்சிய பலபடுத்தற நோக்கத்தில அதிமுக போன்ற மாற்று கட்சியில இருக்கிறவங்கள திமுகவுக்கு கொண்டுவந்திருக்காரு. ஆலாம்பாளையத்தில ஏழாவது வார்டு அதிமுக கவுன்சிலர் திமுகவுக்கு வந்திருக்காரு. குமாரபாளையம் நகராட்சியில நாலு கவுன்சிலர்கள திமுகவுக்கு கூட்டிவந்தாரு. மதிமுகவிலிருந்து 50 பேரு, அதிமுக மாவட்ட மகளிர் அணி துணைதலைவி நர்மதா தலைமையில பெண்கள் 50 பேர்வந்தாங்க, பள்ளிபாளையத்தில நெறய பேர திமுகவில சேர்ந்த்து இருக்காரு. சமீபத்தில பெத்தனூரை சேர்ந்த இளைஞர்கள் சிலர் திமுகவுக்கு வந்தாங்க. சின்ன இடைவெளியில் தங்கமணி கூப்பிட்டாருன்னு சொல்லி அங்கயே போயிட்டாங்க. இதபார்த்து அதிமுகவினர் கிண்டல் கூட செஞ்சாங்க.

அதே பொத்தனுர்ல அதிமுக மாணவரணி இணை செயலாளர் பிரபாகரன் தலைமையில, இளம்பெண்கள் பாசறை, அம்மா பேரவையில இருந்து மதுராசெந்தில் 60 பேரை தூக்கி வந்தி திமுகவுல சேர்த்திட்டாரு. இதுல தங்கமணி டோட்டல் அப்செட். மா.செயலாளர் ஆன ஒருவருஷத்தில மதுரா செந்தில் 6000 பேர் மாற்றுகட்சியில இருந்து அழைச்சிவந்து திமுகவுல சேர்த்திருக்காரு.

இதெல்லாம் பார்த்து தங்கமணி ஜெர்க் ஆயிட்டாரு. பேருக்கு மா.செயலாளரா இருப்பார்ன்னு பார்த்தா குடைச்சல் கொடுக்க ஆரம்பிச்சிட்டாறேன்னு கடுப்பாயிட்டாரு. குமாரபாளையத்தில 15 வருஷமா எம்.எல்.ஏ.வா இருக்காரு தங்கமணி. குமாரபாளையம், பள்ளிபாளையம் தங்கமணிக்கு பலமான ஏரியா.

அந்தபலத்தை உடைக்க மதுரா செந்தில் முடிவெடுத்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஓட்டுகள் கொண்ட பள்ளிபாளையம் திமுக ஒன்றியத்தை முன்றாக பிரித்து ஒன்றிய செயலாளர்களை போட்டாரு. அதுல எல்லா கம்யூனிட்டி ஆட்களுக்கும் வாய்ப்பு கொடுத்தாரு. அதேமாதிரி குமாரபாளையம் நகரத்தை ரெண்டா பிரிச்சி செட்டியார் சமூகத்த சேர்ந்த ஒருத்தர நகரசெயலாளர கொண்டு வந்திருக்காரு. நகரம், ஒன்றியத்தை பிரிச்சி கொடுத்ததால வேலை வேகமா நடக்குது. இதெல்லாம் தங்கமணியை கடுப்பாக்கினாலும், கலைஞர் நூற்றாண்டு விழாவுக்கு மதுரா செந்தில் கூட்டிய பெண்கள் கூட்டம் இன்னும் கடுப்பாக்கிடுச்சி.

கலைஞர் நூற்றாண்டு விழா பொதுகூட்டம் குமாரபாளையம் பல்லாக்கபாளையத்தில அமைச்சர் வேலு தலைமையில நடந்தது. இந்தகூட்டத்தில பெண்கள் மட்டுமே 10,000 பேரை திரட்டினாரு மதுரா. நம்ம தொகுதியில பத்தாயிரம் பெண்களா? எப்படிடா திமுக திரட்டிச்சின்னு திகைச்சி போயிட்டாரு தங்கமணி.

குமாரபாளையம் தொகுதியை தங்கமணி கிட்ட இருந்த தூக்கா அத்தனை வேலைகளையும் முன்னவே ஆரம்பிச்சிட்டாரு மதுரா. குமாரபாளையம், பள்ளிபாளையம் சாயபட்டறை கெமிக்கல் கழிவு காவிரி ஆத்துல கலந்துடுது. அது காவிரி ஆத்து தண்ணீ குடிக்கிற மக்களுக்கு கேன்சர உண்டாக்கி விட்றுது. இந்த தொழில பெரிய லெவல்ல செய்யறது தஙகமணிக்கு நெருக்கமான வட்டாரந்தான். ஆத்துல கெமிக்கல கலக்கிறது மனுசன, மனுசனே விஷம் வச்சி கொல்றதுக்கு சமம். இத அனுமதிக்கூடாதுன்னு பள்ளி பாளையம், குமாரபாளையம் நகராட்சிக்கு தலைவர்கள கண்காணிக்க சொல்லிட்டாருமதுரா. லோக்கல் ஆட்கள தங்கமணி கேட்க, அவங்க மதுரா செந்திலை நோக்கி கைக் காட்டிட்டாங்க. இதுல செம்ம கடுப்பு தங்கமணிக்கு. மதுரா செந்திலுக்கு எதிரா மல்லுகட்டு தேவைங்கிறது உணர்ந்து தொகுதி பக்கம் தலைகாட்ட ஆரம்பிச்சிட்டாரு தங்கமணி.

தமிழ்நாட்டு திமுகவுக்கு முன்னோடியா நாடளுமன்ற தேர்தலுக்கான செயல்வீரர்கள் கூட்டத்தை நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக முடிச்சிடுச்சி. இத பார்த்துட்டு தங்கமணி‘ நாடளுமன்ற தேர்தல்ல ஒரு ஓட்டு திமுக என் தொகுதியில அதிகமாவாங்கினாலும், பெருமைகொண்டாட ஆரம்பிச்சிடுவாங்க. அதனால விடகூடாதுன்னு அதிமுக நிர்வாகிகள விரட்ட ஆரம்பிச்சிட்டாரு. புதியமுகமான மதுரா செந்தில் தங்கமணிக்கு எதிரா இவ்வளவு மல்லு கட்டறது திமுகவுக்கு புத்துணர்ச்சியை கொடுத்து இளைஞர்கள ஈர்த்து இருக்கு. இளைஞர்கள் அதிகம் பேர் திமுகவுக்கு வந்து சேர்றாங்க.’’ என்றார்கள்.

மதுரா செந்தில் பிஸி என்ற நிலையில் அவரது ஆதரவாளர்களிடம் பேசினோம். ‘‘ மதுரா செந்தில் தங்கமணி கூட மல்லு கட்டினாலும், சொந்த கட்சியில தங்கமணி கூட தொடர்பு இருக்கிறதா தலைமைக்கு பெட்டிஷன் போடறாங்க. குறிப்பிட்ட தொடர்பு தான் பழைய மா.செயலாளர் பதவிக்கே ஆப்பு வச்சதுன்னு தெரிஞ்சி பிறகு அதசெய்வாரா? குமாரபாளையம் நகராட்சி பிரச்சினை, வெப்படையை பதவியில இருந்து தூக்கினது, கட்சிகாரங்க மேல நடவடைக்கை எடுக்க மாட்டேங்கிறார்ன்னு குறைசொல்லி தலைமைக்கு மொட்டை பெட்டிஷன் போட்டுகிட்டுதான் இருக்காங்க. அதையெல்லாம் கண்டுக்கல மதுரா. தங்கமணி எதிரா கத்தி சுழற்றுவதில் கவனம் செலுத்தறாரு. மேலும் முதல்வர் ஸ்டாலின், சின்னவர் உதயநிதி வழியில் அண்ணனின் அரசியல் பயணம் தொடர்கிறது’ என்றார்கள்.

தங்கமணி ஆதரவாளர்களோ, ‘‘தங்கமணி எவ்வளவு சக்திவாய்ந்த வருன்னு உங்களுக்கே தெரியும். அவரு அனுபவத்துக்கு மதுரா எம்மாத்திரம்.? திமுக எப்பவும் கோஷ்டி, கோஷ்டியா பிரிஞ்சி அவங்கள வீழ்த்திக்கத்தான் பார்ப்பாங்க. எங்க பக்கம் நெருங்க மாட்டாங்க. திமுக மா.செயலாளர் முட்டிமோதி, கட்சியில மாற்றம் செஞ்சி எங்கள ( தங்கமணி) வீழ்த்த ஆசை படறாரு. நாடளுமன்ற தேர்தல்ல ஒட்டு அதிகமா வாங்கி கட்டா சொல்லுங்க திமுகவை. அப்புறம் அவங்க பவுச பார்க்கலாம்’’ என்றார்கள் அதிரடியாய்.

நடக்கும் என்பார் நடக்காது..! நடக்காது என்பார் நடந்துவிடும்..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal