பாஜக தலைமை அழைப்பை ஏற்று டெல்லி சென்றுள்ள அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று சந்தித்து, மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற தேசியக் கட்சிகள் மற்றும் பல்வேறு மாநிலக் கட்சிகள் தற்போதே மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளைத் தொடங்கிவிட்டன. இதற்கிடையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் முழக்கத்தை பாஜக முன்னெடுத்துள்ளது.

காங்கிரஸ் தலைமையில் திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு மாநிலக் கட்சிகள் இடம்பெற்றுள்ள இண்டியா கூட்டணி மூன்று முறை கூடி, மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக விவாதித்து விட்டன. இது பாஜக தலைமைக்கு நெருடலை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.

மத்தியில் இருமுறை ஆட்சியைப் பிடித்த நிலையில், தொடர்ந்து மூன்றாவது முறையும் ஆட்சியைப் பிடிப்பதில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அதனால், அவ்வப்போது பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் கூட்டணிக் கட்சி தலைவர்களையும், கூட்டணிக் கட்சி எம்.பி.க்களையும் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் வலுப்பெறத் துடிக்கும் பாஜக, வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் கணிசமான இடங்களில் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற வேண்டுமென்பதில் உறுதியாக உள்ளது.

இந்த சூழலில், பாஜக கூட்டணியில் உள்ள பெரிய கட்சியான அதிமுகவின் பொதுச் செயலாளர் பழனிசாமியுடன், மக்களவைத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த பாஜக தலைமை அழைப்பு விடுத்திருந்தது. அதை ஏற்று பழனிசாமி நேற்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு நேற்றிரவு அமித் ஷாவை சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பில் தமிழக அரசியல் நிலவரம், திமுக கூட்டணியின் தற்போதைய நிலை, அதிமுக கூட்டணியின் தற்போதைய பலம், பாமக மற்றும் தேமுதிக கட்சிகளின் தற்போதைய நிலைப்பாடு, முன்கூட்டியே தேர்தல் அறிவிக்கப்பட்டால் அதை எதிர்கொள்வது, தொகுதிப் பங்கீடு, தமிழகத்தில் பாஜக போட்டியிட விரும்பும் தொகுதிகள், வரும் 18-ம் தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் கொண்டுவரப்பட உள்ள மசோதாக்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே அமித் ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி என்ன பேசினார் என்பது பற்றி டெல்லி வட்டாரத்தில் பேசினோம்.

‘‘சார், சந்திப்பின் போது நலம் விசாரித்துக்கொண்டபின் சிஷ விஷயங்களை எடப்பாடி பழனிசாமியிடம் சீரியஸாக பேசியிருக்கிறார் அமித் ஷா! அதாவது, ‘தமிழகத்தில் தி.மு.க.வின் மீது அதிருப்தி இருந்தாலும், அ.தி.மு.க.வில் உள்ள சிறிய அளவிலான விரிசல், தி.மு.க.விற்கு சாதகமாக அமைய வாய்ப்பிருக்கிறது.

மத்தியில் எடப்பாடியாவது ஆட்சியைப் பிடித்தாக வேண்டும் என ‘கிரியும் &பாம்பு’மாக இருக்கும் கெஜ்ரிவாலும், காங்கிரசும் கைகோர்த்திருக்கும் நிலையில், நீங்களும், சிந்தாமல் சிதறாமல் உங்களுடைய கட்சி வாக்குகளை பெறவேண்டும். அதற்கான வியூகத்தை உடனடியாக அமையுங்கள்.

அதாவது, ஓ.பி.எஸ். தரப்பினர் கூட பா.ஜ.க. தலைமையை விமர்சித்து வருகிறார்கள். ஆனால், டி.டி.வி. தரப்பில் யாரும் விமர்சிக்கவில்லை. அதே சமயம், சசிகலா தரப்பும் பா.ஜ.க.வை விமர்சிக்கவில்லை. எனவே, உங்களுடன் கூட்டணியில் அவர்களை சேர்க்காவிட்டாலும் பரவாயில்லை. நாங்கள் அவர்களுக்கு தலா ஒரு தொகுதியை கொடுத்து சேர்த்துக்கொள்கிறோம்’ என்று கூறியிருக்கிறார்.

அதற்கு எடப்பாடி பழனிசாமி முகம் மாற, ‘அடுத்து காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் ஆபத்து எந்தளவிற்கு இருக்கும் என்பதை உணரவேண்டும். அடுத்து நாம்தான் ஆட்சியைப் பிடிக்கப் போகிறோம் என்று அசால்டாக இருந்துவிடக்கூடாது. எனவே, நீங்கள் முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்தால்தான், தமிழகத்தில் 20 இடங்களுக்கு மேல் நாம் வெற்றி பெற முடியும் என்று கூறியதோடு, பா.ஜ.க. போட்டியிட வாய்ப்புள்ள தொகுதிகளையும் பட்டியல் போட்டிருக்கிறார் அமித்ஷா!

எடப்பாடி பழனிசாமியைப் பொறுத்தளவில் நாடாளுமன்றத் தேர்தல் அவர்களுக்கு ஒரு பொருட்டில்லை என்றாலும், ‘வழக்குகள்’ மாஜிக்கள் மேல் இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் சமாளித்துக்கொள்ளலாம் என்ற எடப்பாடியின் எண்ணம், அமித் ஷாவின் பேச்சின் மூலம் தற்போது மாறியிருக்கிறது. இந்த நிலையில்தான், அ.தி.மு.க.வில் சில மாற்றங்களை கொண்டுவரவும் எடப்பாடி பழனிசாமி தயராகிவிட்டார்.

டெல்லியிலிருந்து வந்தவுடன் மாவட்டங்களை பிரித்து, சில மூத்த நிர்வாகிகளுக்கு மாவட்டச் செயலாளர் பதவியைக் கொடுக்க இருக்கிறாராம். அதில் தளவாய் சுந்தரம், முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதி உள்பட பலரது பெயர் இருக்கிறதாம். டெல்லியில் இருந்து வந்தவுடன் அ.தி.மு.க.வில் அதிரடி மாற்றம் இருக்கும் என்கிறார்கள்.

அதே சமயம், ‘தி.மு.க.விற்கான செக்’கும் இருக்கிறதாம். காரணம் தி.மு.க.வினர் எப்படி எல்லாம் சம்பாதித்து இருக்கிறார்கள் என்ற சில ஆதாரங்களை அமித் ஷாவிடம் கொடுத்திருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal