சிறுபான்மையினருக்கு பி.ஜே.பி. எதிரி போலவும், தி.மு.க.தான் தோழனாக இருப்பது போன்ற போலிமுகத்தை நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தோலுரித்துக் காட்டியிருக்கிறார்.

கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த இஸ்லாமிய சிறை கைதி அப்துல் ஹக்கீம் உடல் நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நாமி தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அன்புச்சகோதரர் சகோதரர் அப்துல் ஹக்கீம் மூளை நரம்புக் கட்டியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

ஒவ்வொரு முறையும் திமுக அரசு ஆட்சி அதிகாரத்திற்கு வரும்பொழுதும் நீண்டகால சிறைவாசிகள் பலரையும் விடுவித்தபோதும், இசுலாமிய சிறைவாசிகளை மட்டும் விடுதலை செய்ய மறுத்து, பச்சை துரோகத்தைப் புரிந்தது. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, ஆட்சிக்கு வந்தால் நீண்டகால இசுலாமிய சிறைவாசிகள் அனைவரையும் விடுதலை செய்வோம் என்று வாக்குறுதியளித்து, இசுலாமியர்களின் வாக்குகளைப் பெற்று அதிகாரத்தை அடைந்த திமுக அரசு, கடந்த இரண்டு ஆண்டுகளாக அண்ணா பிறந்தநாளினை முன்னிட்டு நீண்டகால சிறைவாசிகளை விடுதலை செய்தபோதும் கூட, மீண்டும் இசுலாமிய சிறைவாசிகளை மட்டும் விடுதலை செய்ய மறுத்து கருணையிலும் மதப்பாகுபாடு காட்டி வஞ்சித்துள்ளது.

இசுலாமிய மக்களுக்கு எதிரான திமுகவின் இத்தகைய தொடர் துரோகச் செயலினைக் கண்டித்தும், நீண்டகால இசுலாமிய சிறைவாசிகள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் சென்னை, கோவை, நாகை ஆகிய பகுதிகளில் எனது தலைமையில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டங்களைத் தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சி முன்னெடுத்தது. ஆனால், தொடர்ப்போராட்டங்களை முன்னெடுக்க நாம் தமிழர் கட்சிக்கு அனுமதி மறுத்து திமுக அரசு தடுத்தது. மேலும், இசுலாமிய மக்களிடம் ஏற்பட்டிருந்த மனக்கொந்தளிப்பினை உணர்ந்து, ஓய்வுபெற்ற நீதியரசர் ஆதிநாராயணன் தலைமையில் இசுலாமியச் சிறைவாசிகள் விடுதலை குறித்து ஆராய ஒரு குழுவினையும் அமைத்தது. ஆனால், அக்குழு அமைக்கப்பட்டு ஒன்றரை ஆண்டிற்கு மேலாகியும் இசுலாமியர் விடுதலையில் ஆக்கப்பூர்வமான எவ்வித முன்னகர்வும் இதுவரை எடுக்கப்படவில்லை.

கடந்த காலங்களில் கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சகோதரர்கள் அபு தாகிர், சபூர் ரகுமான், ரிசுவான் உள்ளிட்ட ஐவர் சிறைவாசிகளாகவே மரணித்த கொடுமைகள் அரங்கேறிய நிலையில், தற்போது சகோதரர் அப்துல் ஹக்கீம் அவர்களும் உயிரிழந்துள்ளது அக்கொடுங்கோன்மை துயரங்களின் நீட்சியும், திராவிட கட்சிகள் ஒருபோதும் இசுலாமிய மக்களுக்கு உண்மையான துணையாக இருக்காது என்பதற்கான சாட்சியுமாகும். மூளை நரம்புக் கட்டியால் பாதிக்கப்பட்ட சகோதரர் அப்துல் ஹக்கீமை உரிய காலத்தில் விடுதலை செய்து, முறையான மருத்துவம் அளிக்கப்பட்டிருந்தால் அவர் இன்னும் நீண்ட காலத்திற்கு அவரது குடும்பத்தினருடன் வாழ்ந்திட செய்திருக்க முடியும். ஆனால், திமுக அரசு பாஜகவின் எதிர்ப்புக்கு பயந்து, சிறிதும் மனச்சான்று இன்றி இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய மறுத்ததன் விளைவே, தற்போது சகோதரர் அப்துல் ஹக்கீம் உயிரும் பறிபோயுள்ளது.

நீண்டகால சிறைவாசிகளை விடுதலை செய்யும் முழு அதிகாரமும் மாநில அரசிடம் உள்ள நிலையில், அதனை செய்யாமல், ஆர்.எஸ்.எஸ் மனப்பான்மை கொண்ட ஆளுநரிடம் விடுதலை கோப்பினை அனுப்ப வேண்டிய அவசியம் என்ன வந்தது? ஏற்கனவே, எழுவர் விடுதலையில் ஆளுநர் வேண்டுமென்றே காலதாமதம் செய்து இறுதிவரை விடுதலைக்கு ஒப்புதல் வழங்கவில்லை எனபது திமுக அரசிற்கு தெரிந்தும், இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலையையும் ஆளுநரின் கரங்களில் தள்ளிவிட்டதன் மூலம் மேலும் பல ஆண்டுகள் விடுதலையை தாமதிக்கச் செய்ய திமுக அரசு திட்டமிட்டுள்ளதா? இசுலாமிய சிறைவாசிகளை மரணத்தின் மூலம் மட்டுமே விடுதலை செய்ய முடியும் என்று திமுக அரசு கருதுகிறதா? இன்னும் எத்தனை இசுலாமியச் சிறைவாசிகளின் உயிரைப் பலி கொள்ள திமுக அரசு திட்டமிட்டுள்ளது?

சிறைவாசிகள், இசுலாமியர் என்பதாலேயே நோய் முற்றும்வரை உரிய சிகிச்சை அளிக்காமலும், விடுப்பு அளிக்காமலும் தடுப்பது எவ்வகையில் நியாயமாகும்? கடுமையான நோயுற்றவர்களை விடுதலை செய்யலாமென சிறைவிதி பிரிவு 632 கூறும் நிலையில், அதன்படி இசுலாமியச் சிறைவாசிகளை விடுதலை செய்ய திமுக அரசிற்கு என்ன தயக்கம்? கருணை அடிப்படையில் விடுதலை என்று கூறிவிட்டு, கருணையில்கூட திமுக அரசு மதப் பாகுபாடு காட்டுவதற்குப் பெயர்தான் ‘திராவிட மாடலா’?.இசுலாமிய சிறைவாசிகள் சட்டப்போராட்டம் நடத்தி பெறமுயன்ற சிறைவிடுப்பினை கூட தரக்கூடாது என்று, பழைய வழக்குகளை காரணம் காட்டி திமுக அரசு உச்சநீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்தது கொடுங்கோன்மையின் உச்சமாகும்.

ஆகவே, திமுக அரசு இனியும் இசுலாமிய மக்களை ஏமாற்றாது, கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஆளுநரின் அனுமதிக்கு காத்திராமல் நீண்டகாலமாக சிறையில் வாடும் இசுலாமிய சிறைவாசிகள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal