நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் பங்களா உள்ளது. கடந்த 24.4.2017 அன்று இந்த பங்களாவில் இருந்த சில பொருட்கள், ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இதனை தடுக்க வந்த காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கில் தொடர்புடைய சேலத்தைச் சேர்ந்த கார் டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் பலியானார்.
கடந்த 6 ஆண்டுகளாக இந்த வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு கொடநாடு வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. தற்போது இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள். கோவை சி.பி.சி.ஐ.டி. கூடுதல் துணை கமிஷனர் முருகவேல் தலைமையில் இந்த விசாரணை நடக்கிறது. கொடநாடு வழக்கின் முக்கிய தடயங்களை அழித்ததாக கூறி டிரைவர் கனகராஜின் சகோதரர் தனபால், அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்தநிலையில் தனபால், பல்வேறு பரபரப்பு குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். தனது தம்பி கனகராஜ் விபத்தில் உயிரிழக்கவில்லை, அவர் சாவில் மர்மம் உள்ளது என்பது போன்ற பல்வேறு திடுக்கிடும் தக வல்களை தெரிவித்து வருகிறார். இதனால் தனபாலிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்தனர். இதற்காக ஊட்டி கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அனுமதி கோரினர்.

தனபாலிடம் விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி தேவையில்லை எனவும், சி.பி.சி.ஐ.டி. போலீசாரே சம்மன் அனுப்பி விசாரித்துக் கொள்ளலாம் என மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல் காதர் உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் இன்று காலை 10 மணிக்கு கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி கூறி தனபாலுக்கு சம்மன் வழங்கினர். சம்மனை பெற்றுக்கொண்ட தனபால் இன்று காலை சேலத்தில் இருந்து கோவை வந்தார்.

கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் போலீசார் முன்பு ஆஜர் ஆனார். தனபாலிடம் கேட்பதற்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல்வேறு கேள்விகளை ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்தனர். அந்த கேள்விகளை கேட்டு தனபாலிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அந்த கேள்விகளுக்கு தனபால் அளித்த பதில்களை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். தனபால் கூறிய தகவல்கள் நம்பகத்தன்மை உள்ளதா, அதற்கான ஆதாரங்கள் உள்ளதா என்பது பற்றியும் விசாரிக்கப்பட்டது.

சி.பி.சி.ஐ.டி. விசாரணையின் போது தனபால் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. தனபால் அளித்துள்ள வாக்குமூலத்தின் பேரில் போலீசார் அடுத்தக்கட்ட நடவடிக்கையை தொடங்க உள்ளதாக சி.பி.சி.ஐ.டி. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக தனபால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் எனது தம்பி என்னிடம் தெரிவித்த சில தகவல்களை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் தெரிவிக்கிறேன். எனக்கு நியாயம் கிடைக்கும் என நம்புகிறேன் என தெரிவித்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal