மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறுகிறது. இந்த நிலையில் தேர்தல் நடைபெற உள்ள பா.ஜனதா ஆளும் மாநிலமான மத்திய பிரதேசத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை சென்றார். அங்குள்ள பினா பகுதிக்கு சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பினா சுத்திகரிப்பு நிலையத்தில் பெட்ரோ கெமிக்கல் வாரியம் மற்றும் மாநிலம் முழுவதும் 10 புதிய தொழில்துறை திட்டங்கள் உள்பட ரூ.50,700 கோடிக்கும் அதிகமான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-
இந்தியா கூட்டணியினர் இந்து மதத்துக்கு எதிரான கொள்கையை கொண்டவர்களாக உள்ளனர். இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் நம்பிக்கையை ஒழிக்க எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி செயல்படுகிறது. சனாதன தர்மத்தை ஒழிப்பதே இந்தியா கூட்டணியின் நோக்கமாக உள்ளது. பாரதம் ஒன்றுபட்டு இருக்க சனாதன தர்மமே காரணமாகும். விவேகானந்தர், லோக்மான்யா திலக்கிற்கு உத்வேகம் அளித்த சனாதனத்தை இந்தியா கூட்டணி அழிக்க நினைக்கிறது. இந்தியாவின் கலாச்சாரத்தை தாக்க ஒரு மறைமுக செயல் திட்டத்துடன் எதிர்க்கட்சிகள் களம் இறங்கி உள்ளது.
இவர்கள் சனாதனத்தையே குறிவைக்கிறார்கள். சனாதனம் மீதான தாக்குதல் நாட்டின் கலாச்சாரம் மீதான தாக்குதல். சனாதனத்தை எவ்வளவு தாக்கி பேசினாலும் அது வளர்ந்து கொண்டேதான் இருக்கும். ஆண்டாண்டு காலமாக சனாதன தர்மம் இந்திய மக்களை ஒருங்கிணைத்து வருகிறது. இந்தியா கூட்டணியின் அவதூறு கருத்துக்களுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். அமைப்பு மற்றும் ஒற்றுமையின் பலத்துடன் அவர்களின் திட்டங்களை முறியடிக்க வேண்டும்.
சனாதனத்தை பின்பற்றுபவர்கள் இந்தியா கூட்டணியிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இன்றைய இந்தியா உலகை இணைக்கும் திறனை வெளிப்படுத்தி வருகிறது. உலக நாடுகளின் நண்பனாக இந்தியா வளர்ந்து வருகிறது. மறுபுறம் சில கட்சிகள் நாட்டையும், சமூகத்தையும் பிளவுபடுத்த முயற்சிக்கின்றன. இந்தியா கூட்டணியில் தலைவர் முடிவு செய்யப்படவில்லை. அவர்களின் தலைமைத்துவத்தில் குழப்பம் நிலவுகிறது. எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் உள்ளவர்கள் தலைகணம் கொண்டவர்கள்.
ஜி-20 மாநாட்டை இந்தியா வெற்றிகரமாக நடத்தியது என்பதை நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஜி-20 மாநாட்டின் வெற்றிக்கான பெருமை நாட்டு மக்களையே சாரும். இது 140 கோடி மக்களின் வெற்றியாகும். மத்திய பிரதேசத்தை முன்பு ஆட்சி செய்தவர்கள் இந்த மாநிலத்துக்காக ஒன்றும் செய்யவில்லை. ஊழல் மற்றும் குற்றங்களை தவிர அவர்கள் எதுவும் செய்யவில்லை. தற்போது பா.ஜனதா அரசு மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு மத்திய மந்திரிகளும், பா.ஜனதா மூத்த தலைவர்களும் ஆவேசமாக கருத்துக்களை கூறி வந்தனர். இந்த நிலையில்தான் பிரதமர் மோடியும் முதல் முறையாக சனாதன தர்மத்துக்கு எதிராக பேசுபவர்களை கடுமையாக விமர்சித்து இன்று கருத்துக்களை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய பிரதேசத்தில் இருந்து இன்று பிற்பகல் பிரதமர் மோடி காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்துக்கு செல்கிறார் அங்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.