விரைவில் நடைபெறவுள்ள ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களை தள்ளிப்போடுவதே ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ விவகாரத்தின் நோக்கம் என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும், அரசியல் ஆர்வலருமான பிரஷாந்த் பூஷன் குற்றம்சாட்டியுள்ளார்.
புவனேஷ்வரில் செய்தியாளர்களிடம் பேசிய பிரஷாந்த் பூஷன் கூறுகையில், “இந்தியா போன்ற நாடாளுமன்ற ஜனநாயகம் உள்ள நாட்டில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பதை நடைமுறைப்படுத்த முடியாது. ஏனென்றால், நமது நடைமுறையில் ஓர் அரசு அதன் பெரும்பான்மையை இழக்கும்போது இடையிலேயே கவிழலாம்; அதன்பின்னர் புதிய அரசு பதவி ஏற்கும்.
இந்த நிலையில், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது நடைமுறைப்படுத்தப்படும்போது இதுபோன்ற நேரங்களில் (இடையில் அரசு கவிழும்போது) குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்படும். இது ஜனநாயகத்துக்கு எதிரானது. அதாவது, நாம் ஜனநாயக அமைப்பில் இருந்து குடியரசுத் தலைவர் ஆட்சி முறைக்கு மாறுகிறோம். இது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு முற்றிலும் எதிரானது. இதுகுறித்து இந்த அரசு தெளிவாக அறிந்து வைத்திருக்கிறது. குடியரசுத் தலைவர் ஆட்சி முறைக்கு பல்வேறு அரசியலமைப்பு சட்டத் திருத்தம் அவசியம் என்பதையும் அவர்கள் அறிந்ந்து வைத்திருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.
மாநிலங்களவையில் இந்த அரசுக்கு பெரும்பான்மை இல்லை. அரசுக்கு இந்த உண்மைகள் எல்லாம் தெரியும் என்றாலும், இந்த ஆண்டு இறுதியில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களை தள்ளிப்போடவே அரசு இந்த பலூனை (ஒரே நாடு ஒரே தேர்தல்) ஊதிப் பறக்கவிடுகிறது.
இந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் பாஜக தோல்வியடைந்து விடும் என்ற பயம் அவர்களுக்கு வந்துவிட்டது. அதனால் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற பெயரில் அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் வரை ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களை ஒத்திப்போட முயல்கிறார்கள். அந்த மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்படும்” என்று பிரஷாந்த் பூஷன் தெரிவித்தார்.