தமிழகத்தில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தில், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு பணிச் சுமை ஏற்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தமிழ்நாட்டில் வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. காஞ்சிபுரத்தில் முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்திற்காக சுமார் 1.62 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சுமார் 1 கோடிக்கும் அதிகமான குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமை தொகை 1000 ரூபாய் மாதம் மாதம் இனி கிடைக்க போகிறது.

இந்த விண்ணப்பங்களை ஆன்லைனில் ஏற்றும்பணி நிறைவு பெற்றுவிட்ட நிலையில், தகுதியானவர்கள் மற்றும் நிராகரிக்கப்பட்டவர்கள் பட்டியலும் கிட்டத்தட்ட ரெடியாகிவிட்டது. முதல்வரின் ஒப்புதலுக்கு பிறகு எஸ்எம்எஸ் அனைவருக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளது. அனேகமாக இன்னும் ஒரிரு நாளில் எஸ்எம்எஸ் வர வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட பணிகளை வருவாய்துறையினர் தான் மேற்கொண்டு வருகிறார்கள். வழக்கமான பணிகளுக்கு நடுவே இந்த கூடுதல் பணிசுமையால் மன அழுத்தத்தில் இருப்பதாக வருவாய்துறையினர் தெரிவித்துள்ளனர். எனவே கலைஞர் உரிமை தொகை திட்ட பணிக்கு என்றே புதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் தலைவர் முருகையன் இந்த கோரிக்கை குறித்து சேலத்தில் பேசினார்.

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மண்டல பயிலரங்கம் சேலம் அடுத்த நெய்க்காரப்பட்டி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அண்மையில் நடந்தது. இந்த கூட்டரங்கில், சேலம், நாமக்கல், தர்மபுரி , கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்கள் உள்ளடங்கிய தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் தலைவர் முருகையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறும் போது,

“கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் பணிகள் காரணமாக வருவாய்த் துறையினர்களுக்கு அதிக பணி சுமை ஏற்பட்டுள்ளது. மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு சிறப்பு பணியிடங்களை உருவாக்க வேண்டும்.. அதன் மூலம் அந்த திட்டங்களை செயல்படுத்திட அரசு முன்வர வேண்டும். கோர்ட் உத்தரவின் பேரில் செயல்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டம், தனி வட்டாட்சியர் மனோஜ் முனியனை அரசியல் உள்நோக்கதோடு பணியிடை நீக்கம் செய்துவிட்டார்கள்.இதை எதிர்த்து தமிழகம் முழுவதும் வருவாய்த் துறையினர் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

. இதன் பின்னர் முதலமைச்சர் உத்தரவின் பேரில் தனி வட்டாட்சியர் பணி இடைநீக்கம் ரத்து செய்யபட்டது. ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் மீது காவல்துறை நடவடிக்கை என்பது ஆங்காங்கே நடந்தள்ளது. மேலும் பொய் வழக்கும் சில இடங்களில் புனையப்பட்டு உள்ளது. தமிழக அரசின் நலதிட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வரும் வருவாய்த்துறை அலுவலரின் நலம் கருதி குற்றவியல் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். தமிழக முதலமைச்சர், மற்றும் துறை அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகளை உடனடியாக அரசு நிறைவேற்ற வேண்டும்.

அண்மை காலமாக அரசு அலுவலர்கள் பணிச்சுமையின் காரணமாக தற்கொலை செய்து கொள்வது அடிக்கடி நடக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் கிராம உதவியாளர், பணி சுமையின் காரணமாக தற்கொலைக்கு செய்திருக்கிறார்கள். மேலும் இந்த மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு போதிய கால அவகாசம் வழங்காமல் இந்த திட்டத்தின் பணிகளை வருவாய்த்துறை அலுவலர்கள் மூலம் செயல்படுத்துகிறார்கள்.இது எங்களுக்கு பெரும் பணி சுமையாகவே உள்ளது. எனவே தமிழக முதலமைச்சர் உடனடியாக கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு புதிய பணியாட்களை நியமிக்க வேண்டும்” என்று முருகையன் கோரிக்கை விடுத்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal