கடந்த தேர்தலில் துரைமுருகன் மகனிடம் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார் ஏ.சி.சண்முகம். அதிமுக -பாஜக கூட்டணி சார்பில் வேலூர் மக்களவைத் தொகுதியில் களமிறங்கும் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் இப்போதே தேர்தல் வேலைகளை ஆரம்பித்துவிட்டார்.
சோர்ந்துகிடந்த தனது கட்சி நிர்வாகிகளை அழைத்து பலமாக கவனித்ததுடன் புதிய பொறுப்புகளையும் அவர்களுக்கு வழங்கியுள்ளார். அதிமுக, பாஜக நிர்வாகிகளுடன் இணைந்து செயல்படுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். கடந்த 2019 மக்களவைத் தேர்தலின் போதும் வேலூர் தொகுதியில் பேட்டியிட்டவர் ஏ.சி.சண்முகம் என்பது குறிப்பிடத்தக்கது.
துரைமுருகன் மகன் கதிர் ஆனந்திடம் சொற்ப வாக்குகளில் கடந்த முறை வெற்றியை பறிகொடுத்த ஏ.சி.சண்முகம், இந்த முறை வென்றே தீருவது என சபதம் எடுத்துள்ளார். இதனிடையே அதிமுக -பாஜக கூட்டணி சார்பில் களமிறங்கும் ஐடியாவில் உள்ள இவர், தாமரை சின்னத்தில் போட்டியிடுவாரா அல்லது இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவாரா என்ற விவரம் தெரியவரவில்லை.
வேலூர் மக்களவைத் தொகுதியில் இப்போதே ஏ.சி.சண்முகம் சத்தமின்றி பரப்புரையை தொடங்கிவிட்டதால், அவரை சமாளிக்க திமுக தரப்பிலும் பணிகள் தொடங்கப்படவுள்ளன. மீண்டும் தனது மகன் கதிர் ஆனந்தை வேலூர் தொகுதியில் போட்டியிட வைக்க விரும்புகிறார் துரைமுருகன். இதனால் தான் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சென்னையிலிருந்து வேலூருக்கு புறப்பட்டுச் சென்று கிராமம் கிராமமாக டூர் செல்கிறார். ஜெகத்ரட்சகன், பாரிவேந்தர் என ஏற்கனவே கல்வித் தந்தைகளாக அறியப்படுபவர்கள் எம்.பி.யாகி டெல்லிக்கு சென்றுள்ள நிலையில் அந்த வரிசையில் இடம்பிடிக்க தயாராகிவிட்டார் ஏ.சி.சண்முகம்.