லியோ படத்துக்காக தளபதி விஜய் பாடிய நா ரெடி பாடலில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய வரிகளை சென்சார் போர்டு அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளது.

விஜய் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லியோ படத்தில் இருந்து இதுவரை ஒரு பாடல் மட்டும் ரிலீஸ் ஆகி உள்ளது. நா ரெடி என தொடங்கும் அப்பாடலை தளபதி விஜய் பாடி உள்ளார். அப்பாடல் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் பட்டைய கிளப்பினாலும், அதன் வரிகள் சர்ச்சையை ஏற்படுத்தின. அப்பாடலை தடை செய்யக்கோரியும் புகார்கள் எழுந்தன.

இந்த நிலையில், நா ரெடி பாடலில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகளை சென்சார் போர்டு அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ‘பத்தாது பாட்டில் நான் குடிக்க, அண்டாவ கொண்டா சியர்ஸ் அடிக்க’, ‘பத்தவச்சு புகைய விட்டா பவர் கிக்கு’ மற்றும் ‘மில்லி உள்ள போனா போதும் கில்லி வெளிய வருவான்டா’ ஆகிய பாடல் வரிகள் நீக்கப்பட்டு உள்ளதாக மத்திய தணிக்கை குழு வெளிட்டுள்ள சான்றிதழில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதுதவிர அந்த பாடலில் இடம்பெறும் விஜய் சிக்ரெட் புகைக்கும் காட்சிகளுக்கும் கத்திரி போட்டுள்ளதாக அந்த சான்றிதழில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. லியோ பட பாடலில் சென்சார் அதிகாரிகள் கை வைத்துள்ள சம்பவம் விஜய் ரசிகர்களையும், லியோ படக்குழுவினரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சென்சார் போர்டின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “நான் ரெடியா பாடலில் வரிகளை மாற்ற உத்தரவு. நீதி வென்றுவிட்டது.தணிக்கை குழுவிற்கு மிக்க நன்றி. எனது புகாரை ஏற்று நான் எடுத்து கூறிய சமூகத்திற்கு எதிரான பாடல் வரிகள் நீக்கபட்டது. எமது சமூகப் பணியும் சட்டப் போராட்டங்களும் அடுத்த தலைமுறை நலனுக்காக தொடரும். உண்மை பணத்தைவிட வலிமையானது” என குறிப்பிட்டுள்ளார். நா ரெடி பாடல் ரிலீஸ் ஆன சமயத்தில் அப்பாடலுக்கு எதிராக ராஜேஸ்வரி பிரியா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal