விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தனது கட்சியினரை தனித்து போட்டியிடவும் தயாராக இருங்கள் என்று உஷார்படுத்தியது அரசியல் களத்தில் பலரது புருவங்களையும் உயர்த்தியது. அப்படின்னா தி.மு.க. கூட்டணியில் இருக்க மாட்டாரா? என்ன பிரச்சனை? என்ற கேள்விகள் எழுந்தது. இது தொடர்பாக அந்த கட்சி நிர்வாகிகள் கூறிய தகவல்கள் மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவர்கள் கூறியதாவது:-

கூட்டணி நல்லாத்தான் போய்கிட்டு இருந்தது. இடையில் பா.ம.க.வை சேர்க்க நடந்த முயற்சிகள் அண்ணனுக்கு பிடிக்கவில்லை. இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீட்டை விரைவாக முடிக்க திட்டமிட்டுள்ளார்கள். தற்போது சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகள் சிறுத்தைகள் கைவசம் உள்ளன. வருகிற தேர்தலில் 3 தொகுதிகள் வேண்டும் என்று கேட்டுள்ளோம். ஆனால் தி.மு.க. தலைமையோ கூடுதல் தொகுதி தர முடியாது. இரண்டு தொகுதிகள்தான் தர முடியும். வேங்கைவயல், நாங்குனேரி சம்பவங்களில் மேற்கொண்ட அணுகுமுறையால் பட்டியலினத்தவர்கள் மத்தியில் செல்வாக்கு சரிந்துள்ளது என்பதை சுட்டி காட்டி பேசி இருக்கிறார்கள்.

இது அண்ணனுக்கு கூடுதல் ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் அ.தி.மு.க. அணியில் சேர்ப்பதற்கான முயற்சியையும் கொங்கு மண்டலத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் முன்னெடுத்துள்ளார். அ.தி.மு.க. தரப்பும் அண்ணனை வரவேற்க தயாராகி விட்டார்கள். இனி அண்ணன்தான் முடிவெடுக்க வேண்டும். கொடுக்கும் 2 தொகுதிகளை பெற்றுக்கொள்வதா? அல்லது கூட்டணிக்கு ‘கல்தா’ கொடுப்பதா? என்பதை விரைவில் முடிவு செய்வார் என்றனர்.


By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal