சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் இளங்கோவன், கனகராஜின் சகோதரர் தனபால் மீது புகார் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது :-
கொடநாடு சம்பவம் குறித்து தவறான தகவல்களை தனபால் கூறி வருகிறார். அவர் சேலம் புதிய பஸ் நிலையத்தில் வைத்து ஒரு பையை கொடுத்ததாக உண்மைக்கு புறம்பான தகவலை கூறி வருகிறார்.

கனகராஜ் இறந்த விபத்து நடந்த இடத்தில் பேட்டி அளித்த தனபால் கொடநாடு கொள்ளைக்கும் எனது தம்பிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறினார். ஆனால் தற்போது தி.மு.க மற்றும் தி.மு.க.வின் பி. டீமான ஓ.பி.எஸ். அணியினர் தூண்டுதலின் பேரில் அவர் தவறான தகவலை கூறி வருகிறார். அவர் ஊட்டி கோர்ட்டில் தனக்கு 2 ஆண்டுகளாக மனநிலை பாதித்துள்ளதால் ஜாமின் வழங்க வேண்டும் என கூறி ஜாமின் கேட்டார்.

அதற்காக மருத்துவர்களின் சான்றிதழ்களையும் இணைத்து வழங்கியிருந்தார். அதன்படி ஊட்டி நீதிபதியும் அவருக்கு ஜாமின் வழங்கினார். 2 நாட்களுக்கு முன்பு தனபாலின் மனைவி சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் ஒரு புகார் கொடுத்தார். அப்போது அவரும் எனது கணவர் கடந்த 4ஆண்டுகளாக மனநிலை பாதித்துள்ளார். தற்போது எனக்கும் எனது குழந்தைகளுக்கும் அவரால் உயிருக்கு பாதுகாப்பு இல்லை பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறியிருந்தார்.

மேச்சேரியில் பதிவான நில மோசடி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட போதும் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்குள்ள மருத்துவர்கள் பரிசோதித்தபோது டாக்டர்களும் அவருக்கு மனநிலை பாதிப்பு உள்ளதாக கூறினர். மனநிலை பாதிக்கப்பட்டவராக இருந்து கொண்டு சிலரது தூண்டுதலின் பேரில் என் மீது தொடர்ந்து தவறான குற்றசாட்டு கூறி வரும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதற்காகவே நான் இன்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளேன். சூப்பிரண்டு இல்லாததால் அதிகாரிகள் மனுவை வாங்கி உள்ளனர். சூப்பிரண்டிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். கொடநாடு வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் அது குறித்து எந்த கருத்தும் கூற முடியாது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது அவருடன் எம்.எல்.ஏ.க்கள் ராஜமுத்து, மணி, ஜெயசங்கரன், நல்லதம்பி உள்பட பலர் இருந்தனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal