சேலம் கொண்டலாம்பட்டி காமராஜர் நகர் என்.மேட்டுதெருவை சேர்ந்தவர் ராஜதுரை (வயது 28). இவர் சேலம் மாநகராட்சி மண்டலம் 4-ல் தற்காலிக டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், ஈரோடு மாவட்டம் பெருந்துறை குட்டம்பாளையம் ஈங்கூர் பகுதியை சேர்ந்த பழனிசாமி மகள் பிரியா (25) என்பவருக்கும் திருமணமாகி சஞ்சனா (1) என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ராஜதுரைக்கும், பிரியாவுக்கும் அடிக்கடி குடும்ப பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து ராஜதுரை தனது மாமனார் பழனிசாமி (50), மாமியார் பாப்பாத்தி (47) ஆகியோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து பழனிசாமி, பாப்பாத்தி ஆகியோர் தனது உறவினர்களான ஆறுமுகம் (49), இவரது மனைவி மஞ்சளா (42), செல்வராஜ் (55), விக்னேஷ் (35) ஆகியோருடன் ஆம்னி வேனில் பெருந்துறையில் இருந்து சேலம் கொண்டலாம்பட்டிக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி மகள், மருமகனை சமாதானம் செய்து வைத்தனர்.

பின்னர் மகள் பிரியா, பேத்தி சஞ்சனாவை சில நாட்கள் தங்களுடன் இருப்பதற்காக அழைத்துக் கொண்டு பழனிசாமி, பாப்பாத்தி உள்பட 8 பேரும் சேலத்தில் இருந்து நேற்று இரவு புறப்பட்டு பெருந்துறை நோக்கி சென்று கொண்டிருந்தனர். ஆம்னி வேனை விக்னேஷ் ஓட்டிச் சென்றார். இன்று அதிகாலை 2.30 மணியளவில் ஆம்னிவேன் சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் சங்ககிரி அடுத்த சின்னாக்கவுண்டனுார் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தது.

அப்போது சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் பின் பக்கத்தில் ஆம்னி வேன் திடீரென பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் பழனிசாமி, பாப்பாத்தி, ஆறுமுகம், மஞ்சுளா, செல்வராஜ், சஞ்சனா ஆகியோர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து ஆம்னி வேன் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஆம்னி வேன் டிரைவர் விக்னேஷ் மற்றும் பிரியா ஆகியோரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

விக்னேஷ், பிரியா ஆகிய இருவருக்கும் அவசர வார்டில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். உயிரிழந்த 6 பேரின் உடலை மீட்டு போலீசார் சங்ககிரி அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டார். அங்கு விபத்து எவ்வாறு நேரிட்டது? என்பது குறித்து போலீசாரிடம் கேட்டறிந்தார். மேலும் விபத்து ஏற்பட்ட காட்சி அந்த பகுதியில் உள்ள ஒரு சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி இருந்தது.

அந்த வீடியோ காட்சியை கலெக்டர் பார்வையிட்டார். விபத்தில் சிக்கியவர்களின் குடும்பத்தினரை சந்தித்தும் ஆறுதல் கூறினார். அதேபோல் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் மற்றும் சங்ககிரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, தாசில்தார் அறிவுடை நம்பி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர். பொதுவாக அதிகாலை நேரத்தில் சாலையில் வாகனங்களின் போக்குவரத்து அதிக அளவில் இருக்காது என்பதால் டிரைவர் விக்னேஷ் அதிவேகத்தில் ஆம்னி வேனை ஓட்டி இருக்கலாம் என தெரிகிறது.

மேலும் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் குளிர்ந்த காற்று வீசுகிறது. அதிவேகத்தில் சென்றபோது குளிர்ந்த காற்று காரணமாக தூக்கத்தில் விக்னேஷ் ஆம்னி வேனை ஓட்டி லாரி மீது மோதி இருக்கலாம் என கூறப்படுகிறது. விபத்து நடந்த இடத்தில் இருந்து லாரியை டிரைவர் எடுத்துச் சென்றுவிட்டார். இதனால் சங்ககிரி போலீசார் வழக்கு பதிந்து விபத்துக்கு காரணமான லாரியையும், டிரைவரையும் தேடிவருகின்றனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலியானதால் அவர்களது உறவினர்கள் சங்ககிரி அரசு ஆஸ்பத்திரியில் திரண்டுள்ளனர். பலியானவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதவாறு உள்ளனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகம் முழுவதும் சோகமாக காணப்படுகிறது. சங்ககிரி அருகே இன்று அதிகாலை நடந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal