‘செந்தில் பாலாஜி தார்மீக அடிப்படையில் அமைச்சராக நீடிக்க முடியாது. எனினும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் முடிவு செய்ய வேண்டும்’ என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியிருப்பதுதான் முதல்வருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, எந்த தகுதியின் அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார் என விளக்கம் கேட்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் எஸ்.ராமச்சந்திரன், அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அதேபோல செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நியமித்த உத்தரவை எதிர்த்தும், அவரை பதவி நீக்கம் செய்த உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்ததை எதிர்த்தும் வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவரும் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த அனைத்து வழக்குகளின் விசாரணை தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் நடைபெற்றது. விசாரணையின் போது தமிழக அரசு தரப்பில், அமைச்சரவையின் திருப்தி அடிப்படையில் மட்டுமே ஆளுநர் செயல்பட முடியும் என்றும், அமைச்சரவைக்கு இணையாக நிர்வாகம் நடத்த ஆளுநருக்கு அரசியல் சட்டம் அதிகாரம் வழங்கவில்லை என்றும், குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டால் தவிர, ஒருவர் அமைச்சராக நீடிக்க எந்த இடையூறும் இல்லை என்றும் வாதிடப்பட்டது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு விரோதமாக ஆளுநர் செயல்பட முடியாது என்றும், அவர் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில் குற்ற பின்னணி, சாட்சிகளை கலைக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறி செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதை விரும்பவில்லை என முதல்வருக்கு ஆளுநர் கடிதம் எழுதியதாகவும், அதன் பின் உரிய காரணங்களை குறிப்பிட்டு செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவை நிறுத்தி வைக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது. செந்தில் பாலாஜியால் அரசு பணியாற்ற முடியாது என்பதால் அவர் அமைச்சராக நீடிக்க முடியுமா என்ற கேள்வி முதல் முறையாக எழுந்துள்ளது என்றும், தன் கண்முன் நடக்கும் சட்டவிரோதங்களை கண்டு, சட்ட அதிகாரம் இல்லை என ஆளுநர் இருக்க முடியாது என்றும் வாதிடப்பட்டது.

தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பளித்த தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேவசலு ஆகியோர், முதல்வர் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதாகவும், அதனடிப்படையில் மனுதாரர்கள் கொண்டுள்ள கவலை நியாயமானதுதான் என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது அரசியலமைப்பு நெறிமுறைகளுக்கு எதிரானது மட்டும் அல்லாமல், தார்மீக அடிப்படையில் சரியானதல்ல என்றும் குறிப்பிட்டுள்ளனர். அவர் இலாகா இல்லாத அமைச்சராக இருப்பதால் எந்த பலனும் இல்லை என குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த வழக்குகளில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என கூறியதுடன், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் நீடிக்க வேண்டுமா என்பது குறித்து முதல்வர் தான் முடிவெடுக்க வேண்டும் என அறிவுறுத்தி, அனைத்து வழக்குகளையும் முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் இதில் என்ன முடிவு எடுப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது தொடர்பாக திமுக செய்தி தொடர்பு செயலாளர் சரவணன் அளித்த பேட்டியில், ‘‘அமைச்சரவையில் யார் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய முதல்வருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அதில் யாரும் முடிவு எடுக்கவே முடியாது. அதோடு செந்தில் பாலாஜிக்கு அமைச்சரவையில் நீடிக்க எல்லா அதிகாரமும் உள்ளது. அவருக்கு எதிராக குற்றம் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. அதனால் அவர் கண்டிப்பாக அமைச்சரவையில் நீடிப்பார். குட்கா வழக்கில் விஜய் பாஸ்கர் கைது செய்யப்பட்டாரே. இங்கே செந்தில் பாலாஜி அமைச்சரவையில் நீடிப்பதை யாரும் தடுக்கவில்லை’’ என்று கூறியுள்ளார்.

அதே சமயம், ‘குட்கா வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர் கைதாகி சிறை செல்லவில்லை’’ என்கின்றனர் அ.தி.மு.க.வினர்

எனினும், செந்தில் பாலாஜி பதவிக்கு எந்த ஆபத்தும் இருக்காது, இலாக்கா இல்லாத அமைச்சரவை பொறுப்பில் இருந்து ஸ்டாலின் இவரை மாற்ற வாய்ப்பே இல்லை என்று செய்திகள் வருகின்றன. ஆனால், உயர்நீதிமன்றமே இப்படி ஒரு கருத்தை தெரிவித்துள்ள நிலையில் முதல்வர் நடவடிக்கை எடுக்காமல் இருந்தால், உயர்நீதிமன்றத்தின் அதிருப்திக்கு ஆளாகலாம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal