மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (திமுக), கர்நாடகா அமைச்சர் பிரியங்க் கார்கே (காங்கிரஸ்) ஆகியோர் மீது பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சனாதன தர்மம், மனிதர்களிடையே ஏற்றத் தாழ்வுகளை உருவாக்குகிறது; இந்த சனாதன தர்மத்தை எதிர்க்கக் கூடாது; ஒழிக்கவே வேண்டும் என தமிழ்நாடு அமைச்சர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார். அவரது இந்த பேச்சை, சனாதனிகளை இனப்படுகொலை செய்ய தூண்டியதாக பா.ஜ.க. குற்றஞ்சாட்டியது.

இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் கமிட்டியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மகனும் கர்நாடகா அமைச்சருமான பிரியங்க் கார்கே, மனிதர்களுக்கிடையே பாகுபாடை உருவாக்கி மனிதனுக்கு உரித்தான கண்ணியத்தை மறுக்கக் கூடிய மதம் ஒரு தொற்று நோய்தான் என ஆணித்தரமாக கூறியிருந்தார். அவரது பேச்சுக்கும் பாஜக தலைவர்கள் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்தனர்.

அத்துடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நாட்டின் பல பகுதிகளில் காவல் நிலையங்களிலும் நீதிமன்றங்களிலும் புகார் மற்றும் வழக்குகள் தொடரப்பட்டன. தற்போது உ.பி. ராம்பூரில் உதயநிதி ஸ்டாலின், பிரியங்க் கார்கே மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருவரும் கருத்துகளை தெரிவித்ததாக போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

ஏற்கனவே, ஒரு சமுதயாத்திற்கு எதிராக ராகுல் காந்தி பேசி, நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு பதவியிழந்ததும், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு பதயேற்றதும் குறிப்பிடத் தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal