தி.மு.க. ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தவுடன் பல்வேறு கட்டணங்கள் மறைமுகமாகவும் நேரடியாகவும் உயர்த்தப்பட்டுவிட்டது. ஏன், கிண்டி உயிரியல் பூங்காவின் நுழைவுக்கட்ணம் கூட உயர்த்தப்பட்டது. இந்த நிலையில்தான் பத்திரப்பதிவு துறையானது, அடுத்தடுத்த கட்டண உயர்வுகளை அமல்படுத்தியிருக்கிறது.

தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில், நிலத்தின் பிரிக்கப்படாத பங்கான யுடிஎஸ் பத்திரம் தனியாகவும், கட்டுமான ஒப்பந்தம் தனியாகவும், இதுநாள்வரையிலும் பதிவு செய்யப்பட்டு வந்தது.

ஆனால், பணி நிறைவு சான்றிதழ் பெறப்பட்ட நிலையில், யுடிஎஸ் பத்திரம், கட்டுமான ஒப்பந்தம் தனித்தனியாக பதிவு செய்யப்படுவதால், பதிவுத்துறைக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டது.

அதனால்தான், பணி நிறைவு சான்றிதழ் பெற்ற திட்டங்களில், யுடிஎஸ் பத்திரத்திலேயே கட்டிட மதிப்பையும் குறிப்பிட்டு, இரண்டுக்கும் சேர்த்து முத்திரை தீர்வை, பதிவு கட்டணம் வசூலிக்க, பதிவுத்துறை முடிவு செய்திருக்கிறது. அந்தவகையில், பணி நிறைவு சான்றிதழ் பெற்ற குடியிருப்புகளில், வீடு விற்பனையின்போது, யுடிஎஸ் பத்திரத்தில் வீட்டின் பரப்பளவையும், மதிப்பையும் குறிப்பிடுவது சமீபத்தில் கட்டாயம் ஆக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த முடிவானது, இது நடுத்தர மக்களை கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி வருகிறது. காரணம், ஒரு புதிய நடைமுறையை அமல்படுத்தும்போது, காலஅவகாசம் தரவேண்டும். ஆனால், உடனே அடுத்த நடைமுறை வந்துள்ளது.

இந்த கட்டண உயர்வினால், பதிவுத்துறைக்கு வருவாய் இழப்பும் ஏற்படுவதுடன், கட்டுமான நிறுவனங்களும் பாதிக்கப்படும், பதிவுக்கான கூடுதல் செலவால், வீடு வாங்க முன்பதிவு செய்தவர்கள், பல இடங்களில் முன்பதிவை ரத்து செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக இந்த முடிவை திரும்ப பெற வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கைகளும் தொடர்ந்துள்ளன.

இந்நிலையில், பதிவுத்துறை செயலாளர் பிறப்பித்த உத்தரவில், “அடுக்குமாடி திட்டங்களில் பணி நிறைவு சான்றிதழ் பெற்ற வீடுகளுக்கு மட்டுமே, இந்த புதிய நடைமுறை பொருந்தும். பணிகள் நடந்து வரும் திட்டங்களில், யுடிஎஸ் பத்திரம் தனியாகவும், கட்டுமான ஒப்பந்தம் தனியாகவும் பதிவு செய்வதில், எந்தவிதமானதடையும் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதில், திடீர் புகார் ஒன்று கிளம்பி உள்ளதாம். பணிகள் முடியாத திட்டங்களில், யுடிஎஸ் பத்திரங்களை தனியாக பதிவு செய்ய, சார் – பதிவாளர்கள் மறுப்பதாகவும், கட்டிட மதிப்பையும் சேர்த்து, அதற்கும் முத்திரை தீர்வை செலுத்த கட்டாயப்படுத்துவதாகவும், கட்டுமான பணிகள் முடியவில்லை என்பதற்கு, தனியாக பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யும்படி சொல்கிறார்களாம்.

இதற்கிடையே, ஒரு ஏக்கர் நிலத்திற்கு அப்ரூவல் வாங்குவதற்கு முன்பு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை கொடுத்து வந்தனர். தற்போது, ரூ.2 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதாம். இது பற்றி தி.மு.க.வைச் சேர்ந்த ஒரு நபரே குற்றம் சாட்டியிருக்கிறார். அதாவது, ‘‘நான் கட்சியில் பல வருடங்களாக இருக்கிறேன்.

கட்சிகாக உடல் உழைப்பை மட்டும் கொடுக்க வில்லை. பணத்தையும் செலவு செய்திருக்கிறேன். பத்து வருடம் கழித்து ஆட்சிக்கு வந்திருக்கிறேன் என்று நினைத்து, நான் பிளாட்டிற்கு அப்ரூவல் வாங்க சென்றேன். அப்போது என்னிடமே ரூ.2 லட்சம் பணம் கேட்டார்கள். அதனால், நான் கட்சி கரைவேட்டியை கழற்றிவிட்டு, சாரதாண வேட்டியில் சென்று அவர்களிடம் பணத்தை கொடுத்துவிட்டு, அப்ரூவல் வாங்கினேன்’’ எனறார் மனம் நொந்தபடி!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கட்டண உயர்வுகள் அதிகரித்து வருவதை திசை திருப்புவதற்குதான், ‘சனாதன’ சர்ச்சை என்று எடப்பாடி பழனிசாமி கூறுவதையும், மறுக்க இயலவில்லை!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal