இந்தியா என்ற பெயரை ‘பாரதம்’ என மத்திய அரசு மாற்றுவதாக தகவல் பரவிந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், டி.ஆர்.பாலு ஆதரவு தெரிவித்திருப்பதுதான் தி.மு.க.வில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘பாசிச’ பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தும் கூட்டணிக்கு ‘இந்தியா’ என்ற பெயரை சூட்டியதில் இருந்தே, பா.ஜ.க.விற்கு இந்தியா என்ற சொல்லே கசக்கிறது. பிரதமர் மோடியால் 9 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா என்ற பெயரை மாற்ற மட்டும்தான் முடிகிறது’ என்று கூறியிருக்கிறார்.

தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி.,யுமான கனிமொழி, ‘நாட்டிற்கான செயல்திட்டத்தை ஆர்.எஸ்.எஸ்.தான் இயற்றுகிறதா?’ என பாரதம் விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்து கனிமொழி பதிவிட்டிருக்கிறார்.

இந்த நிலையில்தான், தி.மு.க. நாடாளுமன்ற நிலைக்குழு தலைவரும், ‘இந்தியா’ கூட்டணியின் தி.மு.க. சார்பில் ஒருங்கிணைப்பாளராக இடம் பெற்றிருக்கும் டி.ஆர்.பாலு, ‘‘பாரத் என்ற பெயர் அரசியலமைப்புச் சட்டத்திலேயே இருக்கிறது. எனவே, அந்த பெயரை மத்திய அரசு பயன்படுத்துவதை நாம் எதிர்க்க முடியாது. தவறு என்றும் கூறிவிட முடியாது’’ என கூறியிருக்கிறார்.

இந்தியாவை ‘பாரத்’ என பெயர் மாற்ற சர்ச்சையில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் திட்டத்திற்கு சாதகமாக பேசி காவி கும்பலுக்கு டி.ஆர்.பாலு துணை போகிறாரா என தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

‘இந்தியா’ கூட்டணியில் உள்ள அனைவரும் இந்தியா பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், டி.ஆர்.பாலு ஆதாரவாக பேசியிருப்பதுதான் ‘இந்தியா’ கூட்டணியிலேயே சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal