மலைக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அசைக்க முடியாத சக்தியா வலம் வருபவர் அமைச்சர் கே.என்.நேரு! தற்போது, அவரது மகன் அருண் நேரு பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுவதாக இருந்த நிலையில், திருச்சியில் போட்டிடப் போவதாக உறுதியான தகவல்கள் கசிகின்றன!

இது பற்றி திருச்சி மலைக்கோட்டை மாவட்ட மூத்த உடன் பிறப்புக்கள் சிலரிடம் பேசினோம்.

‘‘சார், திருச்சி தி.மு.க.வைப் பொறுத்தளவில் அமைச்சராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், என்றைக்குமே ‘அமைச்சர்’ கே.என்.நேருதான். ஆட்சி அதிகாரத்தில் இல்லாவிட்டாலும், காரியம் சாதிக்கக்கூடிய வல்லமை படைத்தவர். மேலும், அவரது மகன் அருண் நேரு கட்சியில் எந்தப் பதவியிலும் இல்லாவிட்டாலும், கட்சி நிர்வாகிகளின் நல்லது, கெட்டதுகளில் கலந்துகொள்கிறார்.

இந்த நிலையில்தான் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுவதாக முடிவு செய்தார் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு. அமைச்சரின் கட்டளைப்படி உடன் பிறப்புக்களும் அதிரடியாக களத்தில் இறங்கி வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில்தான், அருண் நேரு திருச்சி பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

காரணம், பெரம்பலூர் தொகுதிக்கான வேட்பாளரின் வெற்றி தோல்வியை தீர்மானிப்பது திருச்சி புறநகர் பகுதிகளான மண்ணச்சநல்லுர், முசிறி, தா.பேட்டை, துறையூர், உப்பிலியபுரம் போன்ற பகுதிகள்தான். இப்பகுதிகளில் ஒன்றிய அளவில் இருக்கும் நிர்வாகிகள் நேருவுக்கு நெருக்கமாக இருப்பதாக காட்டிக்கொண்டாலும், ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ.வுக்கு ஏற்பட்ட நிலைமை நமக்கும் ஏற்படலாம் என ‘உள்குத்து’ வேலைகளில் இறங்க ஆரம்பித்துவிட்டனர்.

இந்த தகவலை அறிந்த அமைச்சர் கே.என்.நேரு, இந்த முறை திருச்சி எம்.பி. தொகுதியில் அருண் நேருவை போட்டியிட வைத்து பாராளுமன்றத்திற்கு அனுப்ப முடிவு செய்திருக்கிறார். இதனால், பெரம்பலூர் தொகுதி தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு ஒதுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

ஏற்கனவே, திருச்சி எம்.பி.யாக இருக்கும் திருநாவுக்கரசர் மீது தொகுதி மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதால், அவர் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அதிகம் என்கிறார்கள். இதனால், அ.தி.மு.க.வில் எம்.பி. சீட் கேட்டு, தற்போதே காய் நகர்த்த ஆரம்பித்துவிட்டார்களாம். காரணம், பெரம்பலூர் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டால் வெற்றி பெறுவது சுலபம் என நினைக்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.

ஆனால், பெரம்பலூர் தொகுதியிலும் அவ்வளவு எளிதில் அ.தி.மு.க. வெற்றி பெற முடியாது. காரணம், அமைச்சர் கே.என்.நேரு பெரம்பலூர் தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வேட்பாளரை வெற்றி பெற வைப்பது உறுதி என சூளுரைத்து இருக்கிறாராம். இந்த நிலையில்தான், அ.தி.மு.க.வில் எந்தவித குற்றச்சாட்டுக்கு ஆளாகாத அப்பழுக்கற்ற புதியமுகத்தை நிறுத்தினால், அ.தி.மு.க. வெற்றி பெறும். இல்லாவிட்டால், ‘உள்குத்தில்’ அ.தி.மு.க. மீண்டும் தோல்வியைத் தழுவும் என்கிறார்கள் தி.மு.க.வினரே! எனவே, பெரம்பலூர் தொகுதியை குறி வைத்து புதுமுகங்கள் களத்தில் இறங்கியிருக்கியிருக்கிறார்கள்’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal