சனாதன ஒழிப்பு தொடர்பான தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஆகியோர் கண்டனம் தெரிவித்ததில் ஆச்சர்யமில்லை. காங்கிரசும் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஆகியோர் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்திருப்பதுதான் ‘இந்தியா’ கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சனாதனத்தை ஒழிப்போம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார். அவரது பேச்சு இந்தியா முழுவதும் பெரும் விவாதங்களை கிளப்பிவிட்டுள்ளது.
இது பற்றி மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் கூறுகையில், ‘‘ சனாதன தர்மம் என்பது பல்லாயிரம் ஆண்டுகாலமாக பல கோடி மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. உலகம் ஒரே குடும்பம் என்பதை வலியுறுத்துவதுதான் சனாதன தர்மம். ஒட்டுமொத்த உலகமும் ஒரே குடும்பம் என்கிறது சனாதனம். தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து குறித்து காங்கிரஸ் தலைவர்கள் ஏன் மாறுபாடான குரலில் பேசுகின்றனர்? மும்பையில் நீங்கள் கூடியது சனாதன தர்மத்தை ஒழித்துக் கட்டத்தானா? உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு ம.பி. காங்கிரஸ் தலைவர்கள் கமல்நாத், திக்விஜய்சிங் என்ன பதில் சொல்வார்கள்? சனாதன தர்மத்தை ஒழிப்போம் என எத்தனையோ பேர் வந்தார்கள்.. ஆனால் சனாதன தர்மத்தை ஒருவராலும் ஒழிக்கவே முடியாது. சனாதன தர்மம் எப்போதும் உயிர்ப்புடனேயே இருக்கும்’’ என்றார்.
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, ‘‘எனக்கு சனாதன தர்மம் மீது மரியாதை உள்ளது. சனாதன தர்மம்தான் ரிக், யஜூர் வேதங்களை உருவாக்கியது. இந்தியா என்பது வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடிப்படையை கொண்டது. எந்த ஒரு மதத்தினரது உணர்வுகளையும் புண்படுத்தக் கூடாது’’ என கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசிய இருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கரண் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என உதயநிதி கூறியிருப்பது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தேசத்தின் கோடிக்கணக்கான மக்கள் சனாதன தர்மத்தின் கொள்கைகளை குறைந்த அளவிலோ அல்லது அதிக அளவிலோ பின்பற்றி வருகிறார்கள். அதுமட்டுமின்றி, உலகின் மிகப் பெரிய சனாதன தர்மக் கோயில்கள் தமிழ்நாட்டின் தஞ்சாவூரில், ஸ்ரீரங்கத்தில், திருவண்ணாமலையில், சிதம்பரத்தில், மதுரையில், சுசீந்திரத்தில், ராமேஸ்வரத்தில் இன்னும் பல இடங்களில் உள்ளன.
ஒரு பொறுப்புள்ள அரசியல்வாதி இம்மாதிரி முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துகளைத் தெரிவிப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ் கலாச்சாரத்தின் மீது மிகப் பெரிய மரியாதை எனக்கு உள்ளது. ஆனாலும், உதயநிதியின் கருத்துக்கு எனது வன்மையான எதிர்ப்பை தெரிவிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
‘இந்தியா’ கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர் என்பதையே இன்னும் முடிவு செய்யாத நிலையில், உதயநிதி ஸ்டாலினின் சனாதன சர்ச்சைப் பேச்சு, அக்கட்சியிலேயே குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது உதயநிதிக்கு ஆதரவு கொடுத்தால், இந்துக்களின் வாக்குகள் பறிபோகும் நிலை மற்ற மாநில கட்சிகளுக்கு ஏற்பட்டிருக்கிறது.