அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன் மற்றும் மருமகனுடைய கட்சி பதவியை பறித்து தி.மு.க. தலைமை அதிரடியாக உத்தரவிட்டிருப்பதுதான் விழுப்புரம் மாவட்டத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
அமைச்சர் செஞ்சி மஸ்தான் மீது கள்ளச்சாராய பிரச்னை, உட்கட்சி பூசல் போன்ற சர்ச்சைகள் தொடர்ந்தன. குறிப்பாக திண்டிவனம் நகர்மன்ற தி.மு.க-வில் 13 தி.மு.க கவுன்சிலர்கள் தனியாகப் பிரிந்து செயல்பட்டு வந்தனர். கடந்த மாத இறுதியில் நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தின்போது 13 கவுன்சிலர்கள் ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தனர்.
இதைத் தொடர்ந்து செப்டம்பர் 2-ம் தேதி அதிருப்தி கவுன்சிலர்கள் தரப்பைச் சேர்ந்த இரண்டு பேர், மாவட்டச் செயலாளர் பதவிக்கு காய்நகர்த்தி வரும் செஞ்சி சிவா (ஜெகத்ரட்சகனின் உறவினர்) ஆகியோர் உதயநிதியைச் சந்தித்திருந்தனர். இந்த நிலையில்தான் அமைச்சர் மஸ்தானுடைய மகன் மொக்தியார் அலி மற்றும் மருமகன் ரிஸ்வானுடைய கட்சிப் பதவியைப் பறித்து, தலைமை அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.