அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார். அப்போது செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு, காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு ஆகியவற்றை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு விசாரித்தது.
இந்த கோர்ட்டு, 2016-ம் ஆண்டு மத்திய அரசு பிறப்பித்த அறிவிப்பாணையின்படி, சட்ட விரோத பண பரிமாற்றம் தடைச்சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டாகும். இந்தநிலையில், செந்தில் பாலாஜி மீதான வழக்கின் குற்றப்பத்திரிகையை கடந்த மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கல் செய்தனர். இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, தமிழ்நாடு அரசு அமைத்து உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.
இந்த கோர்ட்டில் செந்தில் பாலாஜி ஆஜராகி குற்றப்பத்திரிகை நகலை பெற்றுக் கொண்டார். இதையடுத்து அவர் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று அந்த சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால், இந்த மனுவை நீதிபதி ரவி விசாரிக்க மறுத்து விட்டார். ஜாமீன் மனுவை, சட்ட விரோத பண பரிமாற்றம் தடைச்சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் கொண்ட மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டுதான் விசாரிக்க வேண்டும் என்று கடந்த ஆகஸ்டு 28-ந்தேதி உத்தரவிட்டார்.
உடனே ஜாமீன் மனுவை மாவட்ட முதன்மை கோர்ட்டில் தாக்கல் செய்தபோது, அந்த மனுவை விசாரிக்க மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதி அல்லி மறுத்து விட்டார். இந்த வழக்கை விசாரிக்கும் எம்.பி., எம்.எல்.ஏ., வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் தான் முறையிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து சிறப்பு கோர்ட்டை செந்தில்பாலாஜி தரப்பு அணுகியபோது, விசாரணைக்கு எடுக்க மறுத்து நீதிபதி வாய்மொழி உத்தரவு பிறப்பித்தார்.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.குமரேஷ்பாபு ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ, அமலாக்கத்துறை சிறப்பு வக்கீல் என்.ரமேஷ் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- ‘‘அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நலம் பாதிக்கப்பட்டு இதய அறுவை சிகிச்சை செய்து உள்ளார். அவரை ஓய்வு எடுக்க டாக்டர்கள் பரிந்துரைத்ததால், ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
ஆனால், இந்த ஜாமீன் மனுவை யார் விசாரிப்பது என்பதில் இரு கோர்ட்டுகளும் மாறி மாறி உத்தரவுகளை பிறப்பித்து, விசாரிக்க மறுத்துள்ளது. சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை எல்லாம் விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டுதான் என்று கூறி, இந்த கோர்ட்டை சிறப்பு கோர்ட்டாக அறிவித்து மத்திய அரசு 2016-ம் ஆண்டு அரசாணை பிறப்பித்துள்ளது.
அதேபோல, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, ஐகோர்ட்டுடன் ஆலோசனை செய்து, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு கோர்ட்டுகளை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இந்த அரசாணையின்படி உருவாக்கப்பட்ட கோர்ட்டில்தான், செந்தில் பாலாஜி வழக்கு மாற்றப்பட்டு, தற்போது நிலுவையில் உள்ளது.
ஆனால், இந்த கோர்ட்டு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க அதிகாரம் கொண்டது. ஆனால், சட்டவிரோத பண பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டுக்குத்தான் உள்ளது. அதனால், இந்த ஜாமீன் மனுவை மட்டுமல்ல, செந்தில்பாலாஜி மீதான சட்டவிரோத பண பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் பதிவான வழக்கையும், மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டுதான் விசாரிக்க வேண்டும்.
எனவே, இந்த வழக்கை சிறப்பு கோர்ட்டில் இருந்து, மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும்’’ இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.