
கடந்த சில தினங்களுக்கு முன்பு முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அடையார் (கிரவுன் பிளாசா) கேட் ஓட்டலில் ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்ட சில சீனியர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
இரண்டு புறமும் கதவடைக்கப்பட்டு மிக மிக முக்கியமான பேச்சு வார்த்தை நடத்தப்பட்ட இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நடந்தது என்ன என்பது பற்றி சீனியர் ஒருவரிடம் பேசினோம். அவர் உதிர்த்த வார்த்தைகள் அனைத்தும் அதிர்ச்சி ரகமானவை,
‘‘சார்… எடப்பாடி பழனிசாமியைப் பொறுத்தளவிற்கு சுயநலவாதி… நரித்தந்திர எண்ணம் கொண்டவர்… வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் நெருக்கத்தில்தான் எடப்பாடி பழனிசாமியின் ‘முழு முகத்தை’ பி.ஜே.பி. மேலிடம் பார்க்கப் போகிறது.
எங்களுக்கு அதைப்பற்றி கவலையில்லை. நாங்கள் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் போட்டியிடப் போகிறோம். தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் உள்ள சில தொகுதிகளில் நாங்கள் தனித்துப் போட்டியிட்டாலே வெற்றிக் கனியை எட்டிப் பிடித்து விடுவோம். எங்களுடன் டி.டி.வி. தினகரன் இணைந்திருப்பது கூடுதல் பலம், விரைவில் சசிகலாவும் எங்களுக்கு ஆதரவு கொடுப்பார். மேலும் கட்சிக் கொடி, சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும் எங்களுக்கு உத்திரவிடவில்லை.
காரணம், சிவில் வழக்குகள் இன்னும் கோர்ட்டில் நடந்து கொண்டிருக்கிறது’’ என்றவர், எடப்பாடி பழனிசாமியின் எதிர்கால திட்டத்தையும் நம்மிடம் பகிர்ந்தார்.
அதாவது, ‘‘எடப்பாடி பழனிசாமிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணம் துளியளவும் இல்லை. பி.ஜே.பி.யுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற எண்ணமும் இல்லை. காரணம், பி.ஜே.பி.யுடன் கூட்டணி வைத்தால் தமிழகத்தில் தோல்வியைத் தழுவிவிடுவோம் என்பது எடப்பாடியாருக்கு நன்றாகத் தெரியும்.
இறுகட்டத்தில் தொகுதி பங்கீடு விவகாரத்தில் பா.ஜ.க.வுடன் மோதலை ஏற்படுத்திக்கொண்டு தனித்து போட்டியிடும் மனநிலையில்தான் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்’’ என்றவரிடம், ‘தற்போது வரை பா.ஜ.க. கூட்டணியில் இருக்கிறோம்’ என்கிறாரே எடப்பாடி பழனிசாமி என்றோம்.
அதற்கு, ‘‘தங்கமணி, வேலுமணி, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட சில அமைச்சர்களையும், தன்னையும் காப்பாற்றிக் கொள்ளத்தான் எடப்பாடி பழனிசாமி ‘மேலிடத்துடன்’ இணக்கமாகச் செல்கிறாரே தவிர, உண்மையில் ‘எதிர் மனநிலையில்’தான் இருக்கிறார். எடப்பாடி பழனிசாமியைப் பொறுத்தளவில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்துதான் காய் நகர்த்துகிறார். அப்போது, நடிகர் விஜய்யுடன் கூட்டணி வைத்து களம் காணவும் தற்போது பேச்சு நடத்தி வருகிறார். எங்களுக்கு எடப்பாடி எல்லாம் ஒரு பொருட்டே கிடையாது.
என்றைக்குமே அம்மா சொன்னது போல், ‘ஒருவர் முதலமைச்சர் பதவியை திருப்பிக் கொடுத்ததாக சரித்திரம் கிடையாது. அப்பேற்பட்ட பதவியையே திருப்பிக் கொடுத்த எங்கள் ஆசான் ஓ.பன்னீர் வழிகாட்டுதலில் காஞ்சியில் இருந்து, எங்களது வெற்றிப் பயணத்தை தொடங்க இருக்கிறோம். நாளை நமதே… நாற்பதும் நமதே..!’’ என உற்சாகத்துடன் முடித்தார்.
