‘ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தால் அ.தி.மு.க. பலிகிடா ஆகும்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

சென்னையில் திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக் கொண்டார். பின்னர், முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

‘‘கழகம் தான் குடும்பம் குடும்பம் தான் கழகம், இதுதான் அண்ணா கண்ட திமுக. யாரின் காலிலும் விழுந்து பதவி பெற வேண்டிய அவசியமில்லை. சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தை காப்பாற்றியது போல, பாராளுமன்றத் தேர்தலில் இந்தியாவை காப்பாற்ற வேண்டும். திமுக குடும்பமாக செயல்படுவது சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதைவிட, யார் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

இந்தியா கூட்டணியின் 3 கூட்டங்களை பார்த்து பயந்து போய் பாராளுமன்றத்தை பாஜக அரசு கூட்டியுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற ஒரு சதி திட்டத்தை தீட்டி ஓர் அதிபராக இருக்க முயற்சி செய்கிறார்கள். அதிமுக ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்த்துவிட்டு தற்போது ஆதரிக்கிறார்கள்.

ஒரே நாடு ஒரே தேர்தலால் அதிமுக பலி கிடா ஆகும், அது புரியாமல் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். தேர்தல் செலவை குறைக்கிறீர்களோ, இல்லையோ கொள்ளையடிப்பதை குறைத்துக் கொள்ளுங்கள். சட்டசபையில் ஆட்சி கவிழ்ந்தால், அடுத்த பாராளுமன்றதேர்தல் வரும் வரை தேர்தல் நடத்தாமல் காத்திருப்பீர்களா’’ இவ்வாறு அவர் கூறினார்.

‘ஆடு நனைகிறதே என்று ஒநாய் கவலைப்பட்ட கதையாக இருக்கிறதே!’ என அ.தி.மு.க.வினரும் எதிர்கருத்தை முன் வைக்கிறார்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal