‘ஒரே நாடு ஒரே தேர்ல்’ நடத்துவதில் சாதகங்கள் ஏராளம் இருந்தாலும், சவால்கள் அதிகம்! இந்த சவால்களை சமாளித்தால் மோடி அரசுக்கு ஒரு ‘ராயல் சல்யூட்’ அடிக்கலாம் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்களும், ஓய்வு பெற்ற தேர்தல் அதிகாரிகளும்!

நாட்டில் கடந்த 1967-ம் ஆண்டு வரை மக்களவை தேர்தலும், மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்களும் ஒரே நேரத்தில்தான் நடந்துள்ளன. ஆனால், அதன் பிறகு சட்டப்பேரவைகள் மற்றும் மக்களவைகள் அதன் 5 ஆண்டு பதவிக் காலத்துக்கு முன்பே கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டதால், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் ஒழுங்குமுறை மாறிவிட்டது.

கடந்த 2022-ம் ஆண்டு அப்போதைய தலைமை தேர்தல் ஆணையராக இருந்த சுஷில் சந்திரா, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயார் என கூறினார். ஆனால் தற்போதுள்ள தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார், கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

மக்களவைத் தேர்தலுடன், சட்டப்பேரவை தேர்தலை நடத்த சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என தேர்தல் ஆணையம் கடந்த 1982-ம் ஆண்டு முதல் பரிந்துரை செய்து வருகிறது. ‘‘ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியம். இதற்கு அரசியலமைப்பு மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும். 30 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்களித்த பின் ஒப்புகை சீட்டு வழங்கும் விவிபாட் இயந்திரங்கள் தயாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு அதிக கால அவகாசம் மற்றும் பணம் தேவை என கடந்த 2015-ம் ஆண்டு மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தோம்’’ என முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த, தேர்தல் ஆணையத்துக்கு 30 லட்சம் எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவை என மதிப் பிடப்பட்டுள்ளது. தற்போது தேர்தல் ஆணையத்திடம் 17.77 லட்சம் எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்களும், 13.06 லட்சம் கட்டுப்பாட்டு யூனிட்டுகளும் உள்ளன. மேலும் 13.26 லட்சம் வாக்குப் பதிவு இயந்திரங்களும், 9.09லட்சம் கட்டுப்பாட்டு யூனிட்டுகளும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் எலக்ட்ரானிக் வாக்குப் பதிவு இயந்திரங்களின் மொத்த எண்ணிக்கை 31.03 லட்சமாகவும், கட்டுப்பாட்டு இயந்திரங்களின் எண்ணிக்கை 22.15 லட்சமாகும் அதிகரிக்கும்.

6 லட்சம் முதல் 7 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்களை தயாரிக்க ஓராண்டு ஆகும் என காந்தி நகர் ஐஐடி இயக்குனரும், ஓட்டுப் பதிவு இயந்திரங்களுக்கான தேர்தல் ஆணையத்தின் தொழில்நுட்ப குழு உறுப்பினருமான பேராசிரியர் ராஜத் மூனா தெரிவித்துள்ளார். அதனால் அடுத்த ஆண்டு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சிரமம் என அவர் கூறியுள்ளார்.

மேலும் எலக்ட்ரானிக் வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்களின் கொள்முதலுக்கு ரூ.9,284.15 கோடிதேவைப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும்மத்திய அரசு மற்றும் நாடாளுமன்ற குழுக்களிடம் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த இயந்திரங்களை மாற்ற வேண்டியிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் நாடு முழுவதும்தேர்தல் நடத்தினால், அந்த இயந்திரத்தை அதன் ஆயுள் காலத்தில் 3 முறை மட்டுமே பயன்படுத்த முடியும். இவற்றை குடோன்களின் வைத்து பாராமரிப்பதற்கான செலவுகளும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும்,உலகிலேயே மிக குறைந்த செல வில், ஒரு வாக்குக்கு ஒரு டாலர் என்ற மதிப்பில் இந்திய தேர்தல்ஆணையம் தேர்தல் நடத்துவதாகவும் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத்தெரிவித்துள்ளார். மேலும் பாதுகாப்பு படையினர் மற்றும் தேர்தல்அதிகாரிகளை பணியமர்த்துவதிலும் சவால்கள் உள்ளன. தேர்தல் பணிக்கு மத்தியப் படைகளை பல மாநிலங்கள் கேட்கின்றன. இதனால் பாதுகாப்பு படைகளை அனைத்து இடங்களுக்கு அனுப்புவதிலும் சவால்கள் உள்ளன.

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ‘‘ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதில் பல சாதக, பாதகங்கள் உள்ளன. இதன் மூலம் நேரம், செலவு, நிர்வாக பணி மிச்சமாகும். ஆனால் சவால்கள் உள்ளன. ஆனால் இந்த சவால்கள் சமாளிக்க முடியாதவை அல்ல. 3 முதல் 4 மாதங்களுக்கு பல கட்டங்களாக தேர்தலை நடத்தினால், நாடு முழுவதும் ஒரேநேரத்தில் மக்களவை தேர்தலையும், சட்டப்பேரவை தேர்தலையும் நடத்த முடியும்’’ என்றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal