மனதில் பட்டதை படக்கென்று மறைக்காமல் பேசுபவர்தான் அமைச்சர் கே.என்.நேரு! கே.என்.நேருவால் பலனடைந்த பலர் அவருக்கு எதிராக திரும்பவதும் திருச்சியில் வாடிக்கையாக நடந்து வருகிறது. இந்த நிலையில்தான், நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் முக்கியத்துவம் குறித்து அமைச்சர் கே.என்.நேரு பேசியிருப்பதுதான் பல்வேறு விவாதங்களை கிளப்பியிருக்கிறது!

திமுக வழக்கறிஞர்கள் அணி நிர்வாகிகள் மத்தியில் பேசிய போது அமைச்சர் நேரு இதனைக் கூறினார். 1989ஆம் ஆண்டு முதல்முறையாக தாம் அமைச்சரான போது சென்னை பசுமை வழிச்சாலையில் அரசு பங்களா ஒதுக்கப்பட்டதாகவும் அப்போது நீதிபதிகள் நடைபயிற்சி வருவார்கள் எனவும் ஆனால் அவர்களிடம் எல்லாம் பழகி வைத்துக் கொள்ள தவறிவிட்டேன் எனவும் ஓபனாக பேசினார்.

நீதிபதிகள், வழக்கறிஞர்களின் முக்கியத்துவம் அப்போது தனக்கு தெரியாமல் போய்விட்டதாகவும் இப்போது ஓரளவு தெரிந்த நீதிபதிகள் கூட எங்கேயாவது பார்க்க நேரிட்டால் பார்த்தும் பார்க்காதது போல் சென்றுவிடுகிறார்கள் என வேதனைத் தெரிவித்தார். திமுக வழக்கறிஞர்கள் அணியில் இருப்பவர்கள் வாதாடும் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

”டேய் யாரிடம் வேண்டுமானாலும் வம்பு இழு, நீதிபதிகளிடம் மட்டும் எந்த வம்பும் வைத்துக் கொள்ளாதே என்றும் குனிந்து பேச வேண்டும்” எனவும் தனக்குச் சொல்லிக் கொடுத்தவர் மறைந்த முன்னாள் அமைச்சர் கோ.சி. மணி என அமைச்சர் கே.என்.நேரு பேசியிருக்கிறார்.

இன்றைய காலக்கட்டத்தில் வக்கீல்கள் இல்லையென்றால் தேர்தலே நடக்காது என்ற சூழல் நிலவுவதாகவும் வேறு எந்த அரசியல் கட்சிக்கும் இல்லாத சிறப்பாக திமுகவில் மிகத் திறமையான வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள் என பெருமிதம் தெரிவித்தார். அதிலும் என்.ஆர்.இளங்கோ போன்றோர் நாலு வார்த்தை பேசினாலே போதும் எதிர்தரப்பில் எதுவும் பேச முடியாது எனத் தெரிவித்தார்.

யாரை விடுகிறார்களோ இல்லையோ எப்படியும் தன் மீது வழக்குகள் போடுவார்கள் என்றும் அமைச்சர் கே.என்.நேரு மத்திய அரசு குறித்து சூசகமாக தெரிவித்தார். மற்ற நிர்வாகிகள் பேசும்போதெல்லாம் நிசப்தமாக இருந்த கூட்டம் அமைச்சர் நேரு பேசும் போது மட்டும் உற்சாகத்துடன் சிரிப்பலையுடன் காணப்பட்டது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal