தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு சேவியர்புரம் பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீதரன். இவரது மனைவி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகன் குருநாத் (வயது 21), நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தக்கலை போலீசார் குருநாத் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அவரது செல்போன் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை பரிசோதனை செய்வதற்காக போலீஸ் நிலையம் எடுத்துச்சென்று ஆய்வு செய்தனர். இதில், குருநாத் ஆன்லைனில் லோன் வாங்கி இருப்பதும் ஆன்லைன் டிரேடிங்கில் ஈடுபட்டதும் தெரியவந்தது. பல்வேறு ஆன்லைன் செயலிகளில் இருந்து லோன் வாங்கியுள்ள அவர், அதை பலமுறை திருப்பி அளித்தும் உள்ளார். ஆனால் தாங்கள் இன்னமும் வட்டி கட்ட வேண்டி உள்ளது என்று தொடர்ந்து பல்வேறு ஆன்லைன் எண்களில் இருந்து அவருக்கு நிர்பந்தம் வந்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஒரு கட்டத்தில் நிர்பந்தம் மிரட்டல் ஆக மாறியதால், குருநாத் வாட்ஸ் அப்பில் ஆன்லைன் மோசடிக்காரர்களிடம் வாய்விட்டு கெஞ்சியுள்ளார். தன்னால் இதற்கு மேல் முடியாது என்றும், நிறைய பணம் கொடுத்து விட்டேன் என்றும், இதற்கு மேல் என்னை நீங்கள் நிர்பந்தப்படுத்தினால் என் வாழ்க்கையை முடித்துக்கொள்வதை தவிர எனக்கு வேறு வழி இல்லை என்றும் அவர் அதில் கூறியிருப்பதாக தெரிகிறது. ஆனால் அவரது இந்த நடவடிக்கையை தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்ட மோசடி கும்பல், குருநாத்தின் புகைப்படத்தை மார்பிங் செய்து அவர் நிர்வாணமாக இருப்பது போன்று சித்தரித்து அவருக்கே அனுப்பி உள்ளது.

உடனடியாக நாங்கள் சொல்லும் பணத்தை கட்டா விட்டால் இந்த புகைப்படத்தை இன்டர்நெட்டில் பரவ விடுவதோடு உனது உறவினர்கள் உனது தாய், தந்தை அனைவருக்கும் அனுப்பி வைப்போம் என்று மிரட்டியதாக தெரிகிறது. இதனால் தான் குருநாத் தற்கொலை முடிவை எடுத்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக குருநாத்தின் தந்தை ஸ்ரீதரன், ஆன்லைன் கும்பல் மீது நடவடிக்கை எடுத்து தனது மகனுடைய சாவுக்கு காரணமான மோசடி கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார் அளித்துள்ளார்.


By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal