சென்னை தி.நகரில் உள்ள தி.மு.க. வட்டச் செயலாளரை 48 மணி நேரத்திற்குள் வாடகை வீட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு அதிரடியாக உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

சென்னை தியாகராய நகர் அப்துல் அஜீஸ் தெருவில் திமுக வட்டச் செயலாளர் ராமலிங்கம் என்பவர், கிரிஜா என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார. ஆனால் பல ஆண்டுகளாக வீட்டை காலி செய்ய மறுத்து வந்தார். அதையடுத்து வீட்டை காலி செய்து கொடுக்கக்கோரி கிரிஜா கோர்ட்டுக்கு போனார். கோர்ட்டும் திமுக வட்ட செயலாளர் ராமலிங்கத்தை காலி செய்ய உத்தரவிட்டது. இறுதியாக இந்த வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்றும் ராமலிங்கம் காலி செய்யவில்லை.

இதனால் மனம் உடைந்த கிரிஜா மீண்டும் இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடந்த விவரங்களை கூறினார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கூறுகையில், “ராமலிங்கம் திமுக வட்டச் செயலாளராக உள்ளதால் மனுதாரரும், அவருடைய கணவரும் தங்களது வயோதிக வயதில் இந்தவீட்டை திரும்பப் பெற 13 ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். ராமலிங்கம் கடந்த 2017-ம் ஆண்டு முதல் வாடகையும் கொடுக்கவில்லை. இத்தனைக்கும் ராமலிங்கத்துக்கு தி.நகர் தண்டபாணி தெருவில் சொந்த வீடு இருந்தும், தற்போதுள்ள வாடகை வீட்டை காலி செய்து கொடுக்க அவருக்கு மனமில்லை என மனுதாரர் தரப்பில் வாதிட்டிருக்கிறார்கள்.

இந்த வழக்கில் கடந்த முறை நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த திமுக வட்டச் செயலாளர் ராமலிங்கம், கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதிக்குள் வீட்டை காலி செய்து, வாடகை பாக்கியையும் கொடுப்பதாக உறுதியளித்திருக்கிறார். ஆனால் அவர் கூறியபடி நடக்கவில்லை. ஆனால் இப்போது அவர் வழக்கறிஞரை மாற்றிவிட்டார். அத்துடன் ராமலிங்கம் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுகளை உதாசீனப்படுத்தி வருகிறார்.

எனவே இந்த வழக்கில் சென்னை பெருநகர காவல் ஆணையரை எதிர்மனு தாரராக சேர்க்கிறேன். சென்னை காவல் ஆணையர் 48 மணி நேரத்துக்குள் ராமலிங்கத்தை வெளியேற்றி, வரும் செப்டம்பர் 4ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal