கொட நாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக சேலத்தில் சிபிசிஐடி போலீஸ் விசாரணையை தொடங்கி உள்ளனர். சிபிசிஐடி காவல் கூடுதல் துணை கண்காணிப்பாளர் முருகவேல் தலைமையிலான குழுவினர் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் மரணம் தொடர்பான விசாரணையை சேலத்தில் முகாமிட்டு நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் முக்கிய விவகாரங்கள் குறித்த விசாரணை சேலத்தை சுற்றியே இருப்பதாகவும் கூறப்படுவதால் பரபரப்பு எழுந்துள்ளது.

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தொடர்புடையதாக கூறப்பட்ட ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்த கொடநாடு வழக்கில அதிமுக பொதுச்செயலாளர் எடப்பா பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் அண்ணன் தனபால் கூறியிருந்தார். இது தொடர்பாக அண்மையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தனபால், எனது தம்பி கனகராஜ் கொடநாடு பங்களாவில் இருந்து 5 பெரிய பைகளை எடுத்து வந்து சிலரிடம் கொடுத்தார்.

கொடநாட்டில் கொள்ளை நடந்த நேரத்தில் தனது தம்பி கனகராஜை பெருந்துறையில் சந்தித்தேன். என்னை சந்தித்த போது கனகராஜ் 5 பெரிய பைகளை வைத்திருந்தார். எடப்பாடி பழனிசாமி கூறியதன் பெயரில் தான் 5 பைகளை எடுத்து வந்ததாக என் தம்பி கனகராஜ் என்னிடம் தெரிவித்தார். 3 பெரிய பைகளை சங்ககிரியிலும் 2 பெரிய பைகளை சேலத்திலும் முக்கிய நபர்களிடம் கொடுக்க இருப்பதாக கனகராஜ் என்னிடம் அப்போது தெரிவித்தார். கொடநாடு பங்களாவில் இருந்து ஏராளமான ஆவணங்களை எடுத்து வந்ததால் எனனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று தெரிவித்த போது தான் ஆத்தூரில் விபத்தில் உயிரிழந்தார்.

என் தம்பி கனகராஜ் இறந்தது விபத்து அல்ல. திட்டமிட்டு செய்யப்பட்ட சதியா என்பதை விசாரிக்க வேண்டும் என்றும் தனபால் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கையும் வைத்தார். மேலும் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான காவல் ஆய்வாளர் ஒருவரிடம் விசாரித்தால் இது குறித்து தெரிய வரும் என்றும் கூறி அதிர வைத்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அவரின் கொடநாடு பங்களாவில் 2017-ம் ஆண்டு, ஏப்ரல் 24-ம் தேதி காவலாளி கொலை செய்யப்பட்டு கொள்ளைச் சம்பவங்கள் நடந்தன. அதைத் தொடர்ந்து மர்ம விபத்து மரணங்கள், தற்கொலை என அடுத்தடுத்து நடந்தன. இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் கேரளாவை சேர்ந்த சயான், வாளையாறு மனோஜ் உட்பட 11 பேர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. முதல் குற்றவாளியான கனகராஜ் சேலம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து சயான் உட்பட 10 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது அனைவரும் ஜாமீனில் வெளியே உள்ளனர்.

இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த 5 ஆண்டு காலமாக இந்த வழக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைப்பெற்று வருகிறது. கொடநாடு வழக்கில் தனிப்படை போலீஸார் கைப்பற்றிய 720 செல்போன் தகவல் பரிமாற்றங்களின் உண்மை தன்மை அறியும் விசாரணையில் சிபிசிஐடி போலீஸார் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் தனிப்படை போலீஸார் விசாரித்த சாட்சிகளின் ஆவணங்களையும் சிபிசிஐடி போலீஸார் ஆய்வு செய்தும் வருகிறார்கள். இதனிடையே கனகராஜ் பயன்படுத்திய 30 செல்போன்கள், 100 சிம் கார்டுகளின் விவரங்களை சி.பி.சி.ஐ.டி சேகரித்துவருகிறது. கனகராஜ் யார் யார் பெயரில் 100 சிம் கார்டுகள் வாங்கினார்.யாரிடம் எல்லாம் பேசினார் என்பது பற்றி புலனாய்வு செய்து வருகிறார்கள். 720 செல்போன் அழைப்புகளை தீவிரமாக விசாரிக்கும் நடவடிக்கையும் இறங்கி உள்ளனர்.

இந்லையில் தான் கொட நாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக சேலத்தில் சிபிசிஐடி போலீஸ் விசாரணையை தொடங்கி உள்ளனர். சிபிசிஐடி காவல் கூடுதல் துணை கண்காணிப்பாளர் முருகவேல் தலைமையிலான குழுவினர் விசாரணையை தொடங்கி உள்ளனர். ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் மரணம் தொடர்பான விசாரணையை சேலத்தில் முகாமிட்டு நடத்தி வருகிறார்கள். இந்த விசாரணையை சிபிசிஐடி போலீசார் திவிரப்படுத்தி உள்ளதால் அரசியல் வட்டாரத்தில்பரபரப்பு எழுந்துள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal